சிங்கப்பூரில் எட்டு வயதிலேயே தொடங்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு: ஆய்வு

சிறார்களிடையே பிரபலமாக இருக்கும் ‘சாட்ஜிபிடி’

சிங்கப்பூரில் எட்டு வயதிலேயே தொடங்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு: ஆய்வு

2 mins read
bfbcea6f-9aef-427d-ad1e-2c6ed805df11
எட்டு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் கிட்டத்தட்ட 16 விழுக்காட்டினர் கணினி விளையாட்டுகளுக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் எட்டு வயதுடைய சிறார்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களிடையே ‘சாட்ஜிபிடி’ மிகவும் பிரபலம்.

இந்த எண்ணிக்கையானது 10 மற்றும் 13 வயதை அச்சிறார்கள் எட்டும்போது உச்சமடைவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

10 வயதில் பத்தில் ஏழு பிள்ளைகளும் 13 வயதில் பத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்டோரும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே ‘சாட்ஜிபிடி’ மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது.

ஏஸ்டாரின் மனித மேம்பாடு, சாத்தியக்கூறு கழக மூத்த ஆய்வாளர் முனைவர் ஷூஜியாவ் சென், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜீன் இயங் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

‘எஸ்ஜி-லீட்ஸ்’ எனும் சிங்கப்பூர்ப் பிள்ளைப் பருவ ஆரம்பகால வளர்ச்சி குறித்த ஆய்விலிருந்து திரட்டப்பட்ட 2,985 பிள்ளைகளின் தேசியப் புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பிள்ளைகளின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை இந்த ஆய்வு நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது.

எட்டு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் கிட்டத்தட்ட 16 விழுக்காட்டினர் விளையாட்டுக்காக மட்டுமே செயற்கை நுண்ணறிவை நாடுகின்றனர்.

அதே வயதுப் பிள்ளைகளில் 17 விழுக்காட்டினர் வாரத்திற்குப் பலமுறை மொழிபெயர்ப்பு, கணக்கு/அறிவியல் புதிர்களைத் தீர்வு காண்பது போன்ற கல்விச் செயல்பாடுகளுக்கும் கணினி விளையாட்டுகளுக்கும் அதைப் பயன்படுத்துகின்றனர்.

வாரத்திற்கு ஒருமுறைக்கும் குறைவாக அல்லது அதைப் பயன்படுத்தாத பிள்ளைகள் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளனர்.

வாரத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பலதரப்பட்ட பணிகளைச் செய்ய 4.4 விழுக்காட்டினர் மட்டுமே அதை உபயோகிக்கின்றனர்.

10-13 வயதுப் பிள்ளைகளில் 23.1 விழுக்காட்டினர் வாரத்திற்குப் பலமுறை கல்வி, கணினி நடவடிக்கைகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

அந்த வயதுப் பிள்ளைகளில் விளையாட்டுக்காக அதைப் பயன்படுத்துவோர் 5.3 விழுக்காட்டினர் ஆவர்.

சாட்ஜிபிடியைத் தவிர்த்து, ‘மெட்டா ஏஐ’, ‘கூகல் ஜெமினி’ போன்றவற்றையும் சிறார்கள் நாடுகின்றனர்.

பெற்றோரின் கல்வித் தகுதி பிள்ளைகளின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு முறையை நிர்ணயிப்பதாக ஆய்வு கூறுகிறது. குறைந்த கல்வித் தகுதியுடைய பெற்றோரின் பிள்ளைகள் கல்வியைவிட பொழுதுபோக்கு, விளையாட்டுக்கே அதைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

தொடக்கநிலை நான்கில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி அமைச்சு மேற்பார்வையின்கீழ் கல்விசார் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ள வேளையில், அதற்கு முந்தைய தொடக்கநிலை இரண்டிலேயே பாதிப் பிள்ளைகள் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவதாக முனைவர் சென் சுட்டிக்காட்டினார்.

எனவே, இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடையே செயற்கை நுண்ணறிவு சார்ந்த எழுத்தறிவும் வழிகாட்டு நெறிமுறைகளும் இன்றியமையாதவை என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்