கடந்த 2025ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 650 சைக்கிளோட்டிகளுக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
போக்குவரத்து விளக்கை மீறி சைக்கிளோட்டியது, சாலைகளில் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாதது ஆகியவை அவர்கள் மீறிய சில விதிகள் என்று காவல்துறை தெரிவித்தது.
சைக்கிளோட்டிகள் அனைத்து போக்குவரத்து சமிக்ஞைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், போக்குவரத்து செல்லும் ஒரே திசையிலேயே பயணிக்க வேண்டும் என்றும் காவல்துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 2) கூறியது.
சாலைகளில் சைக்கிள் ஓட்டும்போது சைக்கிளோட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், சாலைகளின் இடது கோடியில் பயணிக்க வேண்டும், மற்ற வாகனங்களை அவர்களை பாதுகாப்பாக முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது.
ஒற்றைவழிச் சாலைகளிலும் பேருந்துத் தடங்கள் செயல்படும் நேரங்களிலும் சைக்கிளோட்டிகள் ஒரே திசையில் சவாரி செய்யவேண்டும்.
இருட்டில் செல்லும்போது முன்புற வெள்ளை விளக்கு, பின்புற சிவப்பு விளக்குகளை எரியவிட வேண்டும். குழுக்களாக சவாரி செய்யும்போது அதிகபட்சமாக ஐந்து சைக்கிள்களே செல்ல வேண்டும்.
சைக்கிள் பாதை உள்ள இடங்களில் அவற்றையே பயன்படுத்த வேண்டும் என்றும் சாலையின் வேறு எந்தப் பகுதியையும் பயன்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை தெரிவித்தது.
சைக்கிளோட்டிகள் விரைவுச்சாலைகள், சுரங்கப் பாதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மேம்பாலச் சாலைகள் ஆகியவற்றில் சைக்கிள் ஓட்டும்போது கைபேசிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் அமலாக்க நடவடிக்கை பற்றி விவரித்த காவல்துறை, “சாலைப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது,” என்றது.
மேலும், சைக்கிளோட்டிகள் உட்பட அனைத்து சாலைப் பயனர்களும் சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது என்றும் சொன்னது.
அரசாங்கத்தின் data.gov.sg என்ற தளத்தில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் 591 சைக்கிளோட்டிகளும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களும் சாலை விபத்துகளில் காயமடைந்தனர்.
அந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் காயமடைந்த மொத்தம் 9,302 பேரில் 6.3 விழுக்காடு அது.
காவல்துறையின் வருடாந்திர போக்குவரத்து அறிக்கை பொதுவாக பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம்.

