தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளைக் குறிக்கும் சூரியகாந்தி மலர்கள்

2 mins read
780fb4cb-0810-483f-ae72-4450db85ef67
பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பூக்களின் காட்சியை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அவருடன் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே நிற்கிறார். - படம்: த. கவி

சிங்கப்பூர்-இந்தியா இடையேயான 60 ஆண்டு இருதரப்பு உறவுகளைக் குறிக்கும் விதமாகக் கரையோரப் பூந்தோட்டத்தில் கண்கவர் சூரியகாந்திப் பூக்களின் காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பூந்தோட்டத்தில் கண்கவர் சூரியகாந்திப் பூக்களின் காட்சி.
கரையோரப் பூந்தோட்டத்தில் கண்கவர் சூரியகாந்திப் பூக்களின் காட்சி. - படம்: த. கவி

3,000 சூரியகாந்திப் பூக்களின் பொன்னிறப் பொலிவு கரையோரப் பூந்தோட்டத்தின் ஃபிளவர் டோம் காட்சியறைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.

கண்காட்சியில் 20 வகை சூரியகாந்திப் பூக்கள்   வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் 20 வகை சூரியகாந்திப் பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. - படம்: த. கவி

சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் முதல் முறையாக இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எழில்மிக்க காட்சிக்காக 20 வகை சூரியகாந்திப் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வேளாண் ஆராய்ச்சியின் விளைவாக 1960களில் இந்தியாவுக்கு வந்த சூரியகாந்திச் செடிகள், இப்போது எண்ணெய் வித்தாகவும் அலங்காரச் செடியாகவும் பயன்படுகின்றன.

புதன்கிழமை (அக்டோபர் 22) பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சூரியகாந்தி பூக்களின் காட்சியை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த மலர்க் காட்சி மயில் சிற்பங்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது.

Watch on YouTube

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 60ஆம் ஆண்டைக் குறிக்கும் இந்த ஆண்டு சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் ஆண்டாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“இது போன்ற நிகழ்ச்சிகள்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த வழியமைக்கும். கலை, உணவு, இசை, பூக்கள் போன்றவற்றின் மூலம் வெவ்வேறு கலாசாரங்கள் பரிமாற்றம் காண்கின்றன,” என்று டாக்டர் ஷில்பாக் கூறினார்.

இந்தியாவின் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமான ஜெய்ப்பூரின் இளஞ்சிவப்பு, கம்பீரமான ஹவா மஹால், பத்ரிகா கேட், ஆம்பர் படிக்கிணறு போன்ற இடங்களும் கண்காட்சியில் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன.

பார்வையாளர்கள் 3,000 சூரியகாந்திப் பூக்களின் அழகைக் காணலாம்.
பார்வையாளர்கள் 3,000 சூரியகாந்திப் பூக்களின் அழகைக் காணலாம். - படம்: த. கவி

நவம்பர் 16ஆம் தேதி வரை இடம்பெறும் இந்தக் கண்காட்சியில் பொதுவான மஞ்சள் நிறம் மட்டுமன்றி சிவப்பு, பழுப்பு நிறப் பூக்களையும் பார்வையாளர்கள் காண முடியும். இவற்றில் சில பூக்கள் ஆச்சரியமூட்டும் வகையில் 1.8 மீட்டர் வரை உயரம் கொண்டவை.

ஹெலியாந்தஸ் ‘சாக்லேட்’, ஹெலியாந்தஸ் ‘சன்ஃபில் பர்பல்’, ஹெலியாந்தஸ் ‘ஸ்ட்ராபெரி பிளான்’ போன்ற வித்தியாசமான சூரியகாந்திப் பூ வகைகளையும் பார்வையாளர்கள் காணலாம்.

“ஜெய்ப்பூருக்குச் சென்று அந்த நகரின் கலாசாரத்தை ஆழமாகக் கண்டறிந்தோம். அதை இந்தக் கண்காட்சியில் சேர்க்க முற்பட்டதோடு இந்த மாதம் தீபாவளிப் பண்டிகையும் கொண்டாடப்பட்டதால் இது இந்தியக் கலாசாரத்தை நன்கு பிரதிபலிக்கும் என நம்புகிறோம்,” என்றார் கரையோரப் பூந்தோட்டத்தின் பாதுகாப்புச் செயல்பாடுகளின் துணை இயக்குநர் மெலிசா டான்.

இந்தியாவின் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமான ஜெய்ப்பூரின் கலாசாரக் கூறுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமான ஜெய்ப்பூரின் கலாசாரக் கூறுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்