பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பும், ‘சன்ஸ்கிரீன்’ நீர்மத்துக்கான தேவையை அதிகப்படியாக்கிவிட்டது.
சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் இந்த சன்ஸ்கிரீன் பெரும் பங்காற்றவல்லது.
தோல் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் சருமப் பாதிப்பு, சூரிய கதிர்களின் தாக்கத்தால் முன்கூட்டியே முதுமையடைதல் போன்ற கவலைகளால் மக்கள் இந்தப் பொருளை நாடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சூரிய தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கும் அனைத்துலகச் சந்தை, 2023ஆம் ஆண்டு 14.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$19 பி.) மதிப்பில் பதிவானது. இது 2033ஆம் ஆண்டுக்குள் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$27.6 பி.) மதிப்பை எட்டும் என்று கணிக்கப்படுவதாக ‘ஸ்பியரிக்கல் இன்சைட்ஸ் & கன்சல்டிங்’ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தச் சந்தை இன்னமும் அதன் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இருப்பினும், இவ்வாண்டு $5.38 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய ‘சன்ஸ்கிரீன்’ துறையின் மூலம் கணிசமான வளர்ச்சி வாய்ப்புகள் அமையும் என்றும் கூறப்படுகிறது.
உலகிலேயே ஆகப் பெரிய ‘சன்ஸ்கிரீன்’ சந்தைக்குரியது அமெரிக்கா. அதையடுத்து சீனாவும் தென்கொரியாவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

