சிங்கப்பூரில் 60 வயது அல்லது அதையும் தாண்டிய ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கப்படுகிறது.
மூத்த ஊழியர்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்களுக்கு மேலும் உதவி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மூத்த ஊழியருக்கான வேலை நியமன உதவித்தொகை (SEC) திட்டம் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இத்திட்டம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 வரை தொடரும்.
60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் செலவைச் சமாளிக்க இத்திட்டம் உதவுகிறது. மாத வருமானம் $4,000க்கும் குறைவாக உள்ள மூத்த ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் இத்தகவல்களை வெளியிட்டார்.
“உடல் ரீதியாக உகந்த நிலையில் இருந்து தொடர்ந்து வேலை செய்ய நினைக்கும் மூத்த ஊழியர்களின் அனுபவத்தையும் ஞானத்தையும் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று திரு வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.
மூப்படையும் சமூகத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் அதிகமான மூத்தோர் தொடர்ந்து வேலை செய்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
மூத்த ஊழியருக்கான வேலை நியமன உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் ஆக அதிக ஆதரவு பெறத் தகுதிபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்படுகிறது. மறுவேலை நியமன வயதை 69க்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கேற்ற வகையில் மூத்த ஊழியருக்கான வேலை நியமன உதவித் தொகைத் திட்டத்தில் மாற்றம் இடம்பெறுகிறது.
“69 வயது அல்லது அதற்கும் அதிக வயதாகும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தில் ஏழு விழுக்காடு வரையிலான தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார். மூத்தோரை வேலைக்கு எடுப்பதன் தொடர்பில் மனிதவள அமைச்சு, முத்தரப்புச் செயற்குழு ஒன்றைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திறன்களை மேம்படுத்திக்கொண்டபோதும் பொருளியல், வர்த்தக இடையூறுகள் காரணமாக சில ஊழியர்கள் வேலையில் பின்னடைவுகளை எதிர்நோக்குவதாக பிரதமர் வோங் சுட்டினார். அத்தகைய ஊழியர்கள் மீண்டுவர, எதிர்வரும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டம் (SkillsFuture Jobseeker Support) போன்றவற்றின் மூலம் உதவ அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்று திரு வோங் விவரித்தார்.
வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இத்திட்டத்தின்கீழ் கூடுதல் மனநிம்மதி தரும் மேம்பட்ட வேலைகளைத் தேடிக்கொள்ள உதவும் நோக்கில் ஆறு மாத காலத்துக்கு ஊழியர்களுக்கு 6,000 வெள்ளி வரை வழங்கப்படும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

