சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் நவம்பர் மாதம் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி கண்டன.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி ஈரிலக்க வளர்ச்சி கண்டது அதற்குக் காரணம்.
ஓராண்டுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 3.4 விழுக்காடு அதிகரித்தது. அக்டோபர் மாதம் அது 4.7 விழுக்காடு குறைந்தது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு டிசம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவித்தன.
முன்னதாக புளூம்பெர்க் கருத்தாய்வில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள், நவம்பர் மாதம் எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காடு குறையும் என்று முன்னுரைத்திருந்தனர்.
இந்த ஆண்டு (2024) முழுவதற்குமான முக்கிய ஏற்றுமதிகளின் வளர்ச்சி முன்னுரைப்பு நவம்பரில் குறைக்கப்பட்ட நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் அது நான்கு முதல் ஐந்து விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் பிற்பாதியில் ஏற்றுமதி எதிர்பார்த்ததைவிட மோசமாக இருக்கும் என்பதால் சிங்கப்பூர் முழு ஆண்டுக்கான ஏற்றுமதி முன்னுரைப்பைக் குறைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில், அடுத்த ஆண்டு எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி ஒன்று முதல் மூன்று விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு அடிப்படையில், மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி நவம்பரில் 23.2 விழுக்காடு அதிகரித்தது. அக்டோபரில் அது 2.6 விழுக்காடாகப் பதிவானது.
இருப்பினும், மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி நவம்பரில் 1.6 விழுக்காடு குறைந்தது. அக்டோபரில் அது 6.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
மருந்துப்பொருள் ஏற்றுமதி 63.8 விழுக்காடு சுருங்கியது இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
தைவான், ஹாங்காங், மலேசியா ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகள் நவம்பரில் முறையே 42.7 விழுக்காடு, 35.3 விழுக்காடு, 24.4 விழுக்காடு அதிகரித்தன.
இருப்பினும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஐரோப்பிய வட்டாரம் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகள் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

