தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்டெல் கட்டமைப்பை சீனக் குழு ஊடுருவியதாகச் சந்தேகம்

1 mins read
0d283f3c-b577-4b23-a471-2a5e30688a64
சிங்டெல் நிறுவனம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப் பெரியக் கைப்பேசிக் கட்டமைப்பு நிறுவனமான சிங்டெல் எனப்படும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகே‌ஷன்சின் கட்டமைப்பை சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் குழு ஒன்று ஊடுருவியதாக தகவல் அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர்.

அக்குழு, உலக நாடுகளில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், முக்கியக் கட்டமைப்புகளை நடத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது இணையத் தாக்குதல்களை நடத்தியது; அதன் ஓர் அங்கமாக சிங்டெல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்டெல் கட்டமைப்பு ஊடுருவப்பட்டது கடந்த ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்செயலை ‘வோல்ட் டைஃபூன்’ (Volt Typhoon) எனும் ஊடுருவல் குழு மேற்கொண்டிருக்கும் என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் நம்புவதாக தகவல் வெளியிட்ட இருவர் குறிப்பிட்டனர். அந்த விசாரணை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் காரணமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவ்விருவரும் கூறினர்.

வோல்ட் டைஃபூன், தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை ஊடுருவக்கூடும் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளடக்கிய பைவ் ஐஸ்’ (Five Eyes) கூட்டமைப்பு இவ்வாண்டு தொடக்கத்தில் எச்சரித்திருந்தது. ஒருவேளை மேற்கத்திய நாடுகளுடன் ராணுவ ரீதியான பூசல் ஏற்பட்டால் இணையத் தாக்குதல்களை நடத்த சீனா அவ்வாறு செய்யக்கூடும் என்று ஃபைவ் ஐஸ் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்