தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் மருந்து விற்க வேண்டுமென்றே கைதாவதற்குத் திட்டமிட்டதாக சந்தேகம்

2 mins read
35c46222-70c1-4ad2-a093-3519bf9e69fb
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சியாவ் சியெஹி (சிவப்பு சட்டை), அவர் லஞ்சம் முயன்றதாக நம்பப்படும் இடத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) கொண்டு செல்லப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விசாரணை தொடரும்போது கூடுதல் காலம் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நோக்கில் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் கைதாக சீனாவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஐவர் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறப்பு அனுமதி பெற்று பிணையில் வெளியில் வருவதே அவர்களின் திட்டம் என நம்பப்படுகிறது. பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு சட்டவிரோத பாலியல் மருந்து வகைகளை விற்க அவர்கள் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 18) இத்தகவல்களை வெளியிட்டது.

இத்திட்டத்துக்கு மூளையாக இருந்தவர் போதை மருந்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிங்கப்பூரர் என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தற்போது விசாரணை நடத்திவருகிறது.

திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து வெளிநாட்டினர்மீது வெள்ளிக்கிழமை ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சியாவ் சியெஹி, 43, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி $400க்கும் அதிகமான தொகையை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுக்க முயன்ற மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பேருந்து நிறுத்தத்தில் புகைபிடித்துக்கொண்டிருந்தபோது அவர் பிடிபட்டார்.

37 வயது ஸு ஸி‌ஷென், ஏப்ரல் 27ஆம் தேதி இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு $119 லஞ்சம் கொடுக்க முயன்ற இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு அருகே அவர் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

தனது அடையாளத்தை அறிவதற்கான சோதனைகளை மேற்கொள்ளாமல் இருக்க மே 3ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஒருவருக்கு லஞ்சமாக $70 தர முயன்றதாக 31 வயது ஸு பிஸின் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜூன் 23ஆம் தேதி இரண்டு தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளுக்கு $100 லஞ்சம் தர முயன்றதாக இரு குற்றச்சாட்டுகளை ஹுவாங் சுவாங்‌‌ஷுன், 40, எதிர்நோக்குகிறார்.

ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் தடை விதிக்கப்பட்ட இடத்தில் புகைபிடித்ததற்காகப் பிடிபட்டபோது அவர் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகத் தெரிகிறது.

சாலை விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லின் லியாங்ஜுன், 32, ஜூன் 24ஆம் தேதி நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு $160 லஞ்சம் கொடுக்க முயன்றதாக நம்பப்படுகிறது. அதன் தொடர்பில் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் லஞ்சம் பெற மறுத்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சியாவ் சியெஹி, கேலாங் லோரோங் 20ல் இருக்கும் நியூ கெத்தே ஹோட்டலுக்கு வெளியே லஞ்சம் தர முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூலை 17) அவ்விடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்