சிங்கப்பூரில் செயல்படும் எட்டுப் பயண முகவை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயண முகவர்கள் சட்டம் 1975ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கை (Audited Statement of Accounts), வருடாந்தர வணிக விவரங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கத் தவறியதற்காக ஏழு நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
பயண முகவர்கள் விதிமுறைகள் 2017இன் கீழ், நிதியாண்டு முடிந்து ஆறு மாதங்களுக்குள் உரிமதாரர்கள் இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அல் ஃபஹீம் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜெமினி டிராவல்ஸ் & டூர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐசிஐடி பிரைவேட் லிமிடெட், இன்டர்சிஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்ஜிவாங்கா பிரைவேட் லிமிடெட், விஸ்ஃபேர் டிராவல் பிரைவேட் லிமிடெட், ஸேயின் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தற்காலிகமாக சேவை இடைநிறுத்தப்பட்ட பயண முகவை நிறுவனங்களாகும்.
குறைந்தபட்ச நிதித் தொகையைக் கடைப்பிடிக்கத் தவறியது, நிதி அபராதத்தைச் செலுத்த தவறியது ஆகியவற்றுக்காக விஎஸ் டிராவல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணி இடைநிறுத்தம், அபராதத் தொகை அல்லது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்வரையோ ஆறு மாதங்கள் வரையோ நடப்பில் இருக்கும்.
தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பயண முகவர்கள் தங்கள் நடப்பு வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றலாம் என்று பயணத்துறைக் கழகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் அவை புதிய வாடிக்கையாளர்களை ஏற்க அனுமதிக்கப்படாது.

