செயற்கை நுண்ணறிவில் ‘எஸ்யுடிடி’ கவனம்

2 mins read
42a8a31c-d581-4b71-b142-329785396272
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி). - கோப்புப் படம்: இணையம்

பொதுவாக வடிவமைப்புக் கல்விக்கான பல்கலைக்கழகமாக பார்க்கப்படும் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) இப்போது செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு இரண்டிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

அந்த வகையில், அவ்விரண்டுக்காகவும் எஸ்யுடிடி 50 மில்லியன் வெள்ளி முதலீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகையில் பெரும்பங்கு, அடுத்த மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம் ஒன்றை உருவாக்கச் செலவிடப்படும் என்று எஸ்யுடிடி கூறியது.

அந்த செயற்கை நுண்ணறிவுத் தளத்தைத் தாங்களே உருவாக்கப்போவதாகவும் அது சொன்னது.

புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம் சுயமாக சிந்தித்துச் செயல்படக்கூடியது என்றும் எஸ்யுடிடி குறிப்பிட்டது. அதனுடன் இணைந்து பணியாற்றும் மனிதர்களுக்கு ஆக்ககரமான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்க அதற்குப் பயிற்சியளிக்கப்படும் என்றும் எஸ்யுடிடி தெரிவித்தது.

இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்கள், கட்டாய அடிப்படை செயற்கை நுண்ணறிவு வடிவமைப்புப் பாடத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், புதிய பாடங்கள் சிலவும் வழங்கப்படும்.

முதுநிலைப் பட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எஸ்யுடிடி, புதிய செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பு முதுநிலைப் பாடத் திட்டத்தைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடத்திட்டத்தின்கீழ் மாணவர்கள் தொழில்துறையினருடன் இணைந்து திட்டப்பணிகளில் ஈடுபடுவர்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தப் பாடத் திட்டத்தில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு முறைகள் / தளங்களுக்கும் இடையிலான கலந்துறவாடல்களை மையமாகக் கொண்டு எஸ்யுடிடி செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் பாடங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஃபூன் கொக் குவாங் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடந்த நேர்காணலின்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

மனித ஆற்றலை மேம்படச் செய்து அதற்கு ஆதரவாக இருக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதே எஸ்யுடிடியின் இலக்கு என்றார் அவர்.

வருங்காலத்தில் புத்தாக்க முயற்சிகளிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும்; அத்தகைய எதிர்காலத்தில் சிறந்து விளங்க மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு இந்த அணுகுமுறை மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்