சுசோ தொழிற்பூங்காத் திட்டம் முதிர்ச்சியடைந்த, வெற்றிகரமான எடுத்துக்காட்டு: லீ

2 mins read
சுசோ நகரில் ஆற்றிய உரையில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
baef0a3a-a417-41cb-9f4d-6daae3eff991
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (இடது), சீனத் துணைப் பிரதமர் ஹெ லிஃபெங்கை நவம்பர் 25ஆம் தேதி சுசோ நகரில் சந்தித்தார். - படம்: சாவ்பாவ்

சுசோ தொழிற்பூங்காத் (SIP) திட்டம், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான முதல் அரசுநிலைத் திட்டம் என்ற முறையில் அதன் குறிக்கோளை முழுமையாக நிறைவேற்றியுள்ளது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

அந்தத் திட்டம் தொடங்கி இந்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

வெற்றிகரமான, வளப்பமான நகரம் என்பதற்கும் அப்பால், பொருளியல் நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கான பயனுள்ள எடுத்துக்காட்டாகவும் சுசோ விளங்குகிறது. நாடு முழுவதும் சீனா இதை நடைமுறைப்படுத்தலாம் என்று திங்கட்கிழமை (நவம்பர் 25), திரு லீ கூறினார்.

சுசோ தொழிற்பூங்கா, தொடர்ந்து இவ்வாறு பங்களிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீனத் துணைப் பிரதமர் ஹெ லிஃபெங்குடனான சந்திப்பின்போது அவர் அவ்வாறு கூறினார்.

ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள திரு லீயும் திரு ஹெயும் சுசோ தொழிற்பூங்காவின் 30ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் சந்தித்தனர்.

இருநாட்டுத் தலைவர்களின் ஆதரவுடன் 1994ஆம் ஆண்டு அத்திட்டம் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் மேம்பாட்டு அனுபவத்தை ஏற்று சீனா பயனடைவதற்கான தளமாகவும் அதேவேளையில் சிங்கப்பூர் அதன் பொருளியலுக்கு வெளிநாட்டுப் பிரிவை உருவாக்கும் உத்திக்கான தளமாகவும் அது தொடங்கப்பட்டது.

278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வீடமைப்பும் தொழிற்சாலைகளும் ஒருங்கிணைந்த நகரமாக விளங்கும் சுசோ இப்போது சீனாவின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க பொருளியல் மேம்பாட்டு வட்டாரமாக உருவெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து, வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முறையைச் சீனா கற்றுக்கொண்டதாகச் சீனத் துணைப் பிரதமர் கூறினார்.

இத்திட்டத்திற்குத் திரு லீ ஆற்றிய பங்களிப்புக்கும் தொடக்கநிலையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவியதற்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

திட்டத்தை வழிநடத்திய கூட்டுக் குழுவின் துணைத் தலைவராகச் செயல்பட்ட திரு லீ, சுசோ தொழிற்பூங்காத் திட்டம் முதிர்ச்சியடைந்த, வெற்றிகரமான எடுத்துக்காட்டு என்றார்.

சீனாவின் எதிர்காலம் குறித்துச் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் மூத்த அமைச்சர் கூறினார்.

சீனா தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சில சவால்களைச் சந்தித்தபோதும் அதை விலக்குவது தெளிவான தொலைநோக்கு அன்று எனவும் அது அறிவார்ந்த செயலாக இருக்காது எனவும் அவர் எச்சரித்தார்.

எனவே, சீனாவின் வளர்ச்சியும் வளப்பமும் அனைத்துலக அரங்கில், முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ககரமான பங்கை ஆற்றமுடியும் என்றும் அது அவ்வாறு பங்காற்ற வேண்டும் என்றும் சிங்கப்பூர் நம்புவதாகத் திரு லீ கூறினார்.

சீனா அதன் பொருளியல் உருமாற்ற முயற்சிகளில் சிறக்கவும், உலகப் பொருளியலோடு ஒருங்கிணையவும், வட்டாரப் பங்காளித்துவ நாடுகளுடனும் இதர வல்லரசுகளுடனும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் உறவுகளை மேம்படுத்தவும் வாழ்த்து கூறியதாக சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்