இந்துக் கோயில், சீனச் சிங்க நடனம், மலாய் சிறப்பு விருந்தினர் என்ற மூன்று கூறுகளையும் கொண்டு சிங்கப்பூரின் பல்லினச் சிறப்பை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றின் வரிசையில், சீனப் புத்தாண்டுக்கான மூத்தோர் மற்றும் வட்டாரவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
தோ பாயோ வட்டாரத்திலுள்ள ஸ்ரீ வைரவிமட காளியம்மன் கோவிலுக்குக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) காலை பிற்பகுதியில் சென்றிருந்தவர்களுக்கு அரிதான காட்சிகள் காத்திருந்தன.
ஆலய நுழைவாயிலுக்குள் புகுந்து மூலவர் முன்னிலையில் பொன்னிறச் சிங்கங்கள் இரண்டு, மேளதாள மணியோசைக்கு ஏற்ப அசைந்தாடி, பார்ப்போரை மகிழ்வித்தன.
சீனப் பண்பாட்டில் செல்வத்தின் கடவுளான ‘கைஷென்’னின் (Caishen) பொம்மை வடிவத்தை அணிந்திருந்த நடனமணியும் சிங்கங்களுடன் ஆடி, சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய்களைப் பரிசாக வழங்கினார்.
ஆலயத்துடன் லியன் ஷான் ஷுவாங் லின் பெளத்த மடாலயம், தோ பாயோ ஈஸ்ட் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு, ஹார்மனி சர்க்கிள் ஆகிய அமைப்புகளும் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.
சமூக நல்லிணக்கத்தின் சான்று: கோவிலில் பல்லினக் கொண்டாட்டம்
ஆலய மண்டபத் தரைத்தளத்தில் மூத்தோருக்கான சீனப் புத்தாண்டு விருந்துணவும் பரிமாறப்பட்டது. ஆறடுக்கு விருந்தைச் சுவைத்தோரில் அரசாங்க வாடகை வீடுகளில் தங்கி வரும் காம்கேர் (ComCare) பயனாளர்களும் அடங்குவர்.
விருந்தின் தொடக்கத்தில் வாழையிலைகளில் ‘லோஹெய்’ (Lo Hei) கிளறப்பட்டு, வளமைக்கான ‘ஹுவாட் ஆ’ (Huat Ah) வாழ்த்து முழக்கங்கள் ஒலித்தன. அத்துடன், ஆலயத்தின் செலவில் முதியோருக்குச் சிவப்புக் காசுப் பைகளும் கொடுக்கப்பட்டன.
சமூக நல்லிணக்கத்தின் சான்று
இந்துக் கோயிலுக்குள் சிங்க நடனத்துடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாட முடியும் என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்றாக இருப்பதாக, பீஷான் - தோ பாயோ அடித்தள அமைப்புகளின் ஆலோசகராக இருக்கும் திரு சக்தியாண்டி சுபாட் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“உணவில் பாதியை ஸ்ரீ வைரவிமட ஆலயமும், மீதிப் பாதியை ஷுவாங் லின் ஆலயமும் வழங்கின. இந்திய நற்பணிச் செயற்குழு, ஹார்மனி சர்க்கல் ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் மகிழ்வுடன் நிகழ்ச்சிக்கு ஒத்தாசையாக இருந்தனர். இன்று முதன்முறையாகச் செய்யப்படும் இத்தகைய ஏற்பாடுகள் தொடர வேண்டும். இப்போது நாம் வளர்க்கும் நல்லுறவு, நெருக்கடி நேரங்களின்போது நமக்கு உதவும்,” என்று அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ஆலயத்திற்குத் தொடர்ச்சியாக வருவதாகக் கூறிய 41 வயது சிஸ்கோ அதிகாரி சுதா சிவகுமரன், தமது சொந்த நாடான மலேசியாவில் இவ்வாறு கண்டதில்லை எனக் கூறினார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற ஆன்றோர் கருத்தை இத்தகைய நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
இந்துக் கோயிலில் சிங்க நடனத்தைக் கொண்டுவருவது பொருந்துமா எனத் தொடக்கத்தில் தாம் நினைத்ததாக ஆலய பக்தர் திருவாட்டி வூ, 69, தெரிவித்தார்.
“சீன நடனம், இந்து ஆலயம் ஆகியவை தனித்தனியே தெய்வீக அம்சங்கள் கொண்டவை என நான் கருதுகிறேன். இவை இரண்டையும் ஒருசேரக் காணும்போது மெய்சிலிர்க்கிறது,” என்று ஆலயத்திற்கு எதிரிலுள்ள புளோக்கில் வசிக்கும் அவர் கூறினார்.
விருந்துண்டு மகிழ்ந்தவர்களில் ஒருவரான தோ பாயோ வட்டாரவாசியும் சக்கர நாற்காலிப் பயனாளருமான திருவாட்டி கோபல் ஜெயந்தி, 71, இவ்வாண்டு வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியதாகக் குறிப்பிட்டார்.
“இங்கு எல்லோரையும் எனக்குத் தெரியும். தொண்டூழியம், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் நான் நிறையப் பங்கெடுப்பேன். உடல் நலிந்தாலும் தொடர்ந்து வருவேன்,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.
எல்லாச் சமயத்தவரும் போற்றும் பரிவு, ஈகை, பிறர் மீதான அன்பு ஆகிய பண்புகளை இந்நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக ஸ்ரீ வைரவிமட ஆலயத் தலைவர் சந்திரசேகர் பழனிசாமி தெரிவித்தார்.

