செயற்கை நுண்ணறிவில் தடம் பதிக்கும் தமிழ் வரைகதைகள்

செயற்கை நுண்ணறிவில் தடம் பதிக்கும் தமிழ் வரைகதைகள்

4 mins read
‘கதை நேரம் 2026’ இறுதிச் சுற்றில் மிளிர்ந்த மாணவர்களின் படைப்புகள்.
c6c3be45-785f-4890-9453-5ec4c84bbb11
‘கதை நேரம் 2026’ வரைகதைப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற இறுதிப் போட்டியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள் ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: ஹரிஹரன்

செயற்கை நுண்ணறிவும் தொன்மை வாய்ந்த செம்மொழியான தமிழும் கைகோத்தால் ஏற்படும் விசித்திரம் என்னவென்பதைச் சிங்கப்பூர் இளையர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘கதை நேரம் 2026’ வரைகதைப் போட்டியின் இறுதிச் சுற்று, கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) தேசிய நூலகக் கட்டடத்திலுள்ள ‘த பாட்’ (The Pod) வளாகத்தில் நடைபெற்றது.

‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனம் அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

போட்டியில், மொத்தம் 12 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் களமிறங்கினர். நான்கு பள்ளிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன.

இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகாத பள்ளி மாணவர்களுக்கும் மேடையில் தரப்புக்கு ஐந்து நிமிடம் வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்களின் திறனும் உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டன. ஏறத்தாழ 150 பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சாங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி, தனது குழுவின் படைப்பை மேடையில் முன்வைத்தார்.
சாங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி, தனது குழுவின் படைப்பை மேடையில் முன்வைத்தார். - படம்: ஹரிஹரன்

உள்ளூரில் தமிழ் உயிரோவியம், வரைகதைப் படைப்புகளின் பற்றாக்குறையைப் போக்கவும் அத்துறையை மாணவர்களுக்கான ஒரு நிலையான தளமாக உருமாற்றவும் 2021ல் ‘கதை நேரம்’ தொடங்கப்பட்டதாக அப்போட்டியின் ஏற்பாட்டாளரும் உயிரோவியக் கலைஞருமான திரு ஜெகநாத் ராமானுஜம் தெரிவித்தார்.

‘கதை நேரம் 2026’ போட்டியின் ஏற்பாட்டாளரும் உயிரோவியக் கலைஞருமான திரு ஜெகநாத் ராமானுஜம் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
‘கதை நேரம் 2026’ போட்டியின் ஏற்பாட்டாளரும் உயிரோவியக் கலைஞருமான திரு ஜெகநாத் ராமானுஜம் நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: ஹரிஹரன்

இந்த ஆண்டின் மிக முக்கிய அம்சமாகப் போட்டியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனுமதிக்கப்பட்டிருந்தது. வரைவதில் சிரமம் இருந்தாலும் கதை சொல்லும் ஆற்றல் கொண்ட மாணவர்களுக்காக அது அறிமுகப்படுத்தப்பட்டது.

“இயந்திரம் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து, துல்லியமான குறிப்புகளைக் கொடுத்து நாமே அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்; செயற்கை நுண்ணறிவு நம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது,” எனும் ஆழமான விழிப்புணர்வு மாணவர்களிடையே வெற்றிகரமாய் விதைக்கப்பட்டதாகத் திரு ஜெகநாத் கூறினார்.

‘தமிழ் முரசு’ நாளிதழின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் எஸ். ஆர். நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜி. காவேரி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

“உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கற்பனைத் திறனும் படைப்புகளைப் படைத்தபோது அவர்கள் முன்வைத்த நயமும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. குறிப்பாக, ஒவ்வொரு கதையிலும் பொதிந்திருந்த சமூகக் கருத்துகள் சிந்தனையைத் தூண்டின,” எனத் திரு சபா. முத்து நடராஜன் பாராட்டினார்.

‘தமிழ் முரசு’ நாளிதழின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
‘தமிழ் முரசு’ நாளிதழின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா. முத்து நடராஜன் நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: ஹரிஹரன்

“மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் பிம்பங்களாகவே அமைந்திருந்தன. வெளித்தோற்றத்தைவிட அக அழகே ஒருவரின் உண்மையான அடையாளம் என்பதை உணர்த்திய ஒரு கதை என்னை வெகுவாக ஈர்த்தது,” என்று கூறினார் டாக்டர் காவேரி.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் எஸ். ஆர். நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜி. காவேரி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் எஸ். ஆர். நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜி. காவேரி நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: ஹரிஹரன்

தொழில்நுட்பத்தின் மீதான ஆளுமை, கதையின் மையக்கருத்து, சவால்களைக் கையாண்ட விதம் ஆகியவையே வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாய் அமைந்ததாக அவர் சொன்னார்.

போட்டியின் முடிவில், நியூ டவுன் உயர்நிலைப் பள்ளி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. அப்பள்ளியின் உயர்நிலை இரண்டில் பயிலும் மாணவர்களான ராஜாமாணிக்கம் தர்ஷினியும் சிவனாதன் நருளனும் குழுவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“உடைந்த ஒரு பொருள், எவ்வாறு ஒரு கதாபாத்திரத்தின் சிதைந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது,” என்பதே தங்கள் கதையின் மையக்கருத்தாய் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

‘கதை நேரம் 2026’ இறுதிச் சுற்றில், நியூ டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய வரைகதையைப் படைத்தனர்.
‘கதை நேரம் 2026’ இறுதிச் சுற்றில், நியூ டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய வரைகதையைப் படைத்தனர். - படம்: ஹரிஹரன்

பள்ளித் தேர்வுகளும் போட்டிக்கான ஆயத்தவேலைகளும் ஒரே நேரத்தில் அமைந்ததால் ஏற்பட்ட நெருக்கடியைத் தங்களின் தமிழாசிரியரின் வழிகாட்டுதலோடும் சிறந்த குழுச் செயல்பாட்டோடும் சாதுரியமாய்க் கடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

‘கதை நேரம் 2026’ போட்டியில் முதல் பரிசு வென்ற நியூ டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், அவர்களின் ஆசிரியர் (இடமிருந்து மூன்றாமவர்), சிறப்பு விருந்தினரான இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம், போட்டியின் ஏற்பாட்டாளர் ஜெகநாத் ராமானுஜம் ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர்.
‘கதை நேரம் 2026’ போட்டியில் முதல் பரிசு வென்ற நியூ டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், அவர்களின் ஆசிரியர் (இடமிருந்து மூன்றாமவர்), சிறப்பு விருந்தினரான இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம், போட்டியின் ஏற்பாட்டாளர் ஜெகநாத் ராமானுஜம் ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: ஹரிஹரன்

‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனும் திருக்குறளைத் தாரக மந்திரமாகக் கொண்டு மூன்று மாதங்கள் உழைத்ததற்குத் தகுந்த பலன் கிடைத்ததாக அவர்கள் கூறினர்.

இரண்டாம் பரிசைப் பொங்கோல் உயர்நிலைப் பள்ளி வென்றது. அப்பள்ளி மாணவிகளான நி. கனிதா, கொடியரசு பவியஶ்ரீ ஆகியோர், தங்கள் குழு உருவாக்கிய ‘உதவும் உள்ளம்’ என்ற கதையின் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

கதாபாத்திரங்களுக்குத் தாங்கள் நினைத்த சரியான உருவங்களைச் செயற்கை நுண்ணறிவு உடனடியாக உருவாக்காததால், தளராமல் மீண்டும் மீண்டும் குறிப்புகளை வழங்கித் தங்கள் குழுவினர் இறுதியில் தகுந்த படங்களை உருவாக்கியதாக அவர்கள் கூறினர்.

ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் குவோ சுவான் பிரெஸ்பிடேரியன் உயர்நிலைப் பள்ளி நான்காம் பரிசையும் வென்றன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

அவர் தமது சிறப்புரையில், கதை சொல்லும் கலையின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

‘கதை நேரம் 2026’ மாபெரும் இறுதிச்சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் சிறப்புரையாற்றினார்.
‘கதை நேரம் 2026’ மாபெரும் இறுதிச்சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர். ராஜாராம் சிறப்புரையாற்றினார். - படம்: ஹரிஹரன்

“எல்லா வயதினரும் புதிய சொற்களைக் கற்றுக்கொண்டு, தங்களின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும் சிந்தனைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் கதைகள் சிறந்த கருவியாக அமைகின்றன.

“காலமாற்றத்திற்கு ஏற்பக் கதை சொல்லும் தளங்களும் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன. முற்காலத்தில் வாய்வழியாகப் பகிரப்பட்ட கதைகள், பின்னர் புத்தகங்களாக மாறி, இன்று வரைகதைகளாக உருமாறியுள்ளன. தவிர்க்க முடியாத இந்த நவீன மாற்றங்கள் மிகவும் அவசியமானவையே.

“இவைதான் இன்றைய தலைமுறையினரிடையே மொழியைக் கொண்டுசேர்க்கின்றன. அந்த அரும்பணியைக் ‘கதை நேரம்’ போன்ற போட்டிகள் செவ்வனே செய்துவருகின்றன,” என்று திரு ராஜாராம் பாராட்டிப் பேசினார்.

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், முதல் சுற்று மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

‘கதை நேரம் 2026’ இறுதிச் சுற்றில் மாணவர்களின் படைப்புகளைக் கண்டு மகிழ்ந்தார் ‘தமிழ் முரசு’ நாளிதழின் ஆசிரியர் த. ராஜசேகர் (வலமிருந்து இரண்டாவது).
‘கதை நேரம் 2026’ இறுதிச் சுற்றில் மாணவர்களின் படைப்புகளைக் கண்டு மகிழ்ந்தார் ‘தமிழ் முரசு’ நாளிதழின் ஆசிரியர் த. ராஜசேகர் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஹரிஹரன்
குறிப்புச் சொற்கள்