தமிழின் உயிரெழுத்துகளுக்கு ஏற்றவாறு, அழகு, ஆற்றல், இளமை, என்ற வரிசையில் ‘ஈடுபாடு’ என்பதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது இவ்வாண்டின் தமிழ் மொழி விழா.
அவ்வகையில், பெற்றோர், ஆசிரியர்கள், இளையர்கள், அரசாங்கம், தமிழ் அமைப்புகள், சமூகப் பங்காளிகளின் ஈடுபாடே 20 ஆண்டுகளாகத் தொடரும் தமிழ்மொழி விழாவிற்கு அடித்தளம் என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு நசீர் கனி.
தமிழை ஒரு தேரோடு ஒப்பிட்ட அவர், “தேர் முன்னேறிச் செல்ல அனைவரும் ஒரே திசையில் நின்று ஒருமித்த கருத்துடன் வடம் பிடித்து இழுக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சியே இன்றைய வளர்ச்சிக்குக் காரணம்” என்று குறிப்பிட்டார்.
இளையர்களுக்கு முதலிடம்
இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்கும் வகையில் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு, இருவழித்தொடர்பு மின்னிலக்க அம்சங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு இவ்வாண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி விழாவின் தாக்கம் இளையர்களின் தினசரி வாழ்வில் பிரதிபலிக்க வழிவகுக்கிறது இம்முயற்சி. இன்றைய இளையர்களே நாளையே பெற்றோர் என்பதால், அவர்களிடத்தில் தமிழ் ஆர்வத்தை விதைப்பதன் மூலம் வருங்கால தலைமுறையினரும் பயன் பெறுவர்.
“தமிழில் பேசும்போது இலக்கணப் பிழைகள் நேருமோ, ஆங்கிலம் கலந்துவிடுமோ என்ற அச்சத்தை இளையர்கள் கைவிட வேண்டும்” என்று இளையர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் திரு நசீர் கனி.
இயக்கத்தின் புதிய முயற்சி
20ஆம் ஆண்டின் சிறப்பு அம்சமாக, மார்ச் 14ஆம் தேதி முதன்முறையாகச் சிறப்பு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கும் 17 அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்திய மரபுடைமை நிலையத்தில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இவ்விழாவில், கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பயிலரங்குகள், விளையாட்டுச் சாவடிகள் எனப் பல சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
“சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், வளர்தமிழ் இயக்கம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும்” என்று உறுதியளித்தார் திரு நசீர் கனி.
ஆதரவாளர்களுடன் இணைந்து, சவால்களைத் தகர்த்து எறிந்து, காலமாற்றத்திற்கேற்பத் தொடர்ந்து தகவமைத்துக் கொண்டு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வளர்தமிழ் இயக்கம் துணை நிற்கும்.
சிங்கப்பூரில் தமிழ் நிலைத்து நிற்க வழி வகுக்கும்.
தமிழ்மொழி விழாவின் விரிவாக்கம்
வளர்தமிழ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் திரு ஆர். ராஜாராமின் தலைமையில், தமிழ்மொழி விழா இரண்டு வார நிகழ்விலிருந்து ஒரு மாத விழாவாக விரிவடைந்தது.
2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு ராஜாராம், தமது பதவிக் காலத்தில், பல தமிழ் அமைப்புகள் அதிக அளவில் தமிழ்மொழி விழாவில் பங்கேற்கத் தொடங்கின என்றார்.
“அதிகரித்த நன்கொடைகளால் நிகழ்ச்சிகள் சிறப்பாகவும் விரிவாகவும் நடத்தப்பட்டன. பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்ட படைப்புகளால் அனைத்துலக கவனமும் ஊடக ஆதரவும் கிடைத்தது,” என்று நினைவுகூர்ந்தார் அவர்.
விழாவின் தொடக்கக் காலத்தில் பங்கேற்ற பல இளையர்கள் இன்று அதே விழாவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்பாளர்களாக மாறியுள்ளது அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு நற்சான்றாய் விளங்குகிறது.
இன்று இளம் சிங்கப்பூர்த் தமிழர்களிடையே தமிழைப் பற்றிய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது திரு ராஜாராமின் நம்பிக்கை.
“தமிழைப் பற்றிய விழிப்புணர்வையும் நேரடி பங்கேற்பையும் வழங்கும் மேடையாகவும், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் இளையர்கள் தமிழுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பாகவும் தமிழ்மொழி விழா விளங்குகிறது” என்று குறிப்பிட்டார் திரு ராஜாராம்.
தமிழ் சமூகத்தின் நிகழ்ச்சி அட்டவணையில் உறுதியாக இடம்பெறும் ஒரு முக்கிய நிகழ்வாகத் தமிழ்மொழி விழா மாறியுள்ளது என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார் அவர்.
கூட்டு முயற்சியே வளர்ச்சியின் அச்சாணி
2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார் திரு எஸ்.மனோகரன். கூட்டு முயற்சிகளையும் பங்காளிகளின் ஒத்துழைப்பையும் முன்னிறுத்திய இவரது தலைமைத்துவம், சமூகப் பிணைப்பை மையமாகக் கொண்டது.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, இந்திய மரபுடைமை நிலையம், மீடியாகார்ப், தமிழ் முரசு போன்ற ஊடகப் பங்காளிகள் போன்றோருடன் பங்காளித்துவம் வலுப்படுத்தப்பட்டது.
மாணவர்களை நேரடியாக உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் வகையில், பள்ளிகளுடன் நெருக்கமான தொடர்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
“மொழி வளர்க்கப்படும் இயற்கையான சூழலாகப் பள்ளிகள் விளங்குவதால், சமூக முன்னெடுப்புகளை மாணவர்களுடன் இணைப்பதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு வலுசேர்க்க முடிந்தது,” என்றார் திரு மனோகரன்.
மொழி ஆளுமை மிக்கவர்கள் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கும் வேளையில், தங்களின் மொழித்திறனில் தன்னம்பிக்கை குறைந்த இளையர்கள் விலகி நிற்பது அமைப்பிற்கு ஒரு தொடர் சவாலாகவே இருந்து வந்ததாக அவர் கூறினார்.
“2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்று பரவலின்போது சமூகமே ஒன்றிணைந்து சில மாதங்களுக்குள் விழாவை இணையம் வழி நடத்துவதற்காக முன்வந்தது” என்று கூறிய அவர், அமைப்புகளின் ஆர்வமும் மீள்திறனும் தமிழ்மொழி விழாவிற்குப் பெரும் பலமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
காலத்தின் தேவைக்கேற்ப, பாரம்பரிய நிகழ்ச்சிகள் இன்று மின்னிலக்க அம்சங்களோடு புதிய வடிவம் பெற்றுள்ளன. புத்தாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதோடு பல அமைப்புகள் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இவற்றைப் பாராட்டத்தக்க மாற்றங்களாகத் திரு மனோகரன் மெச்சினார்.
“சமுதாயத்தினரிடையே தமிழ் மொழி மீதான வலுவான அடையாளத்தையும் பெருமையையும் வளர்க்க தமிழ்மொழி விழா உதவியுள்ளது,” என்றார் அவர்.
ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் தமிழ்மொழி விழா 2026
இவ்வாண்டு 20வது முறையாகக் கோலாகலமாகத் தடம் பதிக்கிறது தமிழ்மொழி விழா.
ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறவுள்ள இவ்விழாவில், 44 அமைப்புகள் ஏற்பாடு செய்யும் 43 நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
‘ஈடுபாடு’ என்னும் கருப்பொருளோடு, இவ்வாண்டின் விழா சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் மொழியுடன் ஒன்றிணைக்க விழைகிறது.
குறிப்பாக, இளையர்களைக் கவரும் வகையிலும் தமிழின் பயன்பாட்டை அன்றாட வாழ்வில் ஊக்குவிக்கும் வகையிலும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துடிப்புமிக்க இளையர் களம்
‘எடுவில்’ அமைப்பு வழங்கும் ‘மின்வழித் தமிழ்மொழி’, மின்னிலக்க விளையாட்டுகள் வழியாக வகுப்பறைகளில் தமிழைக் கற்பிக்கிறது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரை மாணவர்கள் இலவசமாக இணையம்வழி பல மொழி விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
தேர்வுகளுக்காக மட்டுமன்றி ஆர்வத்தோடு தமிழைத் தேடிச் செல்ல இத்தகைய நவீனத் தொழில்நுட்ப முறைகள் இளையர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.
“இவ்வாண்டு ஈடுபாடு எனும் கருப்பொருளுக்கு ஏற்ப, மாணவர்கள் எந்நேரமும் எவ்விடத்திலும் தமிழோடு இணைந்திருக்க வழிவகுத்துள்ளோம்,” என்றார் ‘எடுவில்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் முத்துகுமரன்.
இளையர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, இளம் நாடக இயக்குநர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படுகிறது அகம் நாடகக் குழு வழங்கும் ‘தியேட்டர் லேப் 6.0 டேபெஸ்ட்ரி ‘ நாடகம்.
இவ்வாண்டு சிங்கப்பூரின் நாட்டுப்புறக் கதைகளை நவீனக் கோணத்தில் இந்நகிழ்ச்சி மேடையேற்றுகிறது.
“நாடகம் என்பது வெறும் நடிப்பு அல்ல; அது மொழி உயிர் பெறும் களம்,” என்கிறார் அகம் நாடகக் குழுவின் நிறுவனர் கணேஷ்.
மாணவர்கள் உணர்வுப்பூர்வமாகத் தமிழில் பேசவும், மொழியோடு ஆழமான ‘ஈடுபாடு’ கொள்ளவும் இந்த மேடை வழிவகுக்கிறது.
திறன் வளர்க்கும் மாணவர் மேடைகள்
மாணவர்களின் சிந்தனைத் திறனையும் மொழி ஆளுமையையும் வளர்க்கவும் முற்படுகிறது தமிழ் மொழி விழா 2026.
அவ்வகையில், மாணவர்கள் தங்கள் கருத்துகளைத் துணிவோடும், தெளிவோடும் தமிழில் முன்வைக்க வழிவகுக்கிறது ‘மாணவர் பட்டிமன்றம்’.
கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு பயிலரங்கு, பேச்சுப் போட்டியெனப் பல கட்டங்களில் விரிவாக நடத்தப்படுகிறது.
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் பட்டிமன்றத்தில், “நிறைவான வாழ்க்கைக்கு அவசிய தேவை - செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா?” எனும் தலைப்பில் அனுபவமிக்க பேச்சாளர்களுடன் இணைந்து மாணவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
“இம்மேடை மாணவர்களின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களின் திறமைகளைக் கண்டறிந்து, தமிழின் மீது ஈடுபாட்டை வளர்த்துக்கொள்வர்,” என்றார் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் யூசுப் ராவுத்தர் ரஜித்.
மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி (ASRJC) வழங்கும் ‘அக்னி 2026 - தமிழே உறவே’ நிகழ்ச்சி விளங்குகிறது.
மாணவர்களால் மாணவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியில், இவ்வாண்டு ஸ்டிக்கர் கலை, குறும்படம், வில்லுப்பாட்டுப் போட்டிகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் தமிழர் இயக்கம் வழங்கும் ‘இன் தமிழும் இளையர்களின் ஈடுபாடும்’ நிகழ்ச்சி, பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வழியாகத் தமிழார்வத்தைத் தூண்டுகிறது.
அதோடு, “கடப்பாடும் ஈடுபாடும்: அன்றும் இன்றும்” எனும் கலந்துரையாடல் மூலம் மூத்தோரும் இளையர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வர்.
தலைமுறைகளைக் கடந்தும் அன்றாட வாழ்வில் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் முதன்மை நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செழுமை மிகு இலக்கியத் தேடல்கள்
தமிழ் மொழியின் அழகையும் இலக்கிய செழுமையையும் கொண்டாடும் வகையில் பல தனித்துவமான இலக்கியப் படைப்புகளும் அரங்கேறவுள்ளன.
தமிழ் கவிதைகளை மாறுபட்ட புதிய வடிவில் வழங்கவுள்ளது தமிழ் கவிதைப் பேச்சு நிகழ்ச்சியான ‘கவிப்பெருக்கு’.
இசையோடு கோர்த்து, மொத்தம் 12 கவிதைகள் இம்முறை படைக்கப்படவுள்ளன.
“அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தலைப்புகளை இவ்வாண்டு தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்றார் கவிப்பெருக்கு குழுவின் நிறுவனர் இராஜேஷ் குமார் தர்மலிங்கம்
இரண்டு சங்க இலக்கியப் பாடல்களை இம்மேடை கவிதைப் பேச்சு வடிவில் வழங்குவது இவ்வாண்டின் புதிய முயற்சியாக விளங்குகிறது.
முதன்முறையாகத் தமிழ் முரசு நாளிதழ் ஏற்பாடு செய்யும் ‘முரசு 360’ (Murasu 360) நிகழ்ச்சி தமிழ்மொழி விழாவை தொகுத்து புத்தாக்க முறையில் வழங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் செய்தியாளர்களுடன் இணைந்து ஏப்ரல் மாதம் முழுதும் நடைபெறும் தமிழ்மொழி விழாவில் களப்பணியாற்றுவர்.
செய்தி சேகரிப்பிலும் நவீன ஊடகத் துறையிலும் இம்மாணவர்கள் பெற்ற அனுபவங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பகிரப்படும்.
மாதம் முழுவதும் நடைபெறவுள்ள தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும் சிறப்பம்சங்களைப் பறைசாற்றும் நிகழ்வாகவும் ‘முரசு 360’ திகழும்.

