தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முரசும் மொழியும்

3 mins read
d725ef71-98ea-4c52-bf30-6f8f379ebbc0
Mentoring என்பதற்கு மதியுரை என்ற தமிழ்ச்சொல்லை ஆக்கி அளித்தது தமிழ் முரசு. - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

உலக மக்கள் பேசும் மொழிகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றுக்கு எழுத்துகள் இருந்தால் மட்டுமே அவற்றால் பலகாலம் நிலைத்திருக்க முடிகிறது.

எழுத்துமொழிகளை வாழும் மொழிகளாக நிலைத்திருக்கச் செய்வதில் ஊடகங்களுக்குப் பெரும்பங்குண்டு.

ஓர் இனத்தின் பண்பாட்டைக் கட்டிக்காப்பதில் மொழிக்கு ஈடுஇணையாக எதுவும் இருக்க முடியாது.

அவ்வகையில், உலகின் ஆக மூத்த தமிழ்ச் செய்தித்தாள்களில் ஒன்றான தமிழ் முரசு அப்பணியைச் செவ்வனே செய்துவருகின்றது.

மணிப்பவள நடையில் எழுதும் போக்கு மலிந்திருந்த காலத்தில் தொடங்கப்பட்டபோதும் பழைய செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தபோது தமிழ் முரசில் அப்போக்கு அவ்வளவாக இல்லை என்பதைக் காணமுடிந்தது.

தனித்தமிழ் இயக்கம் தலையெடுத்தபிறகு பிறமொழிச் சொற்களைக் களைந்து, நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் ஆர்வமும் போக்கும் மேலோங்கின.

துறைதோறும் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், அவைசார்ந்த புதுப் புதுச் சொற்களும் குவிகின்றன. பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டிய சூழலில், ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழில் எழுதியாக வேண்டிய நிலை.

அவற்றை மொழிபெயர்க்காமல் ஒலிபெயர்த்து எழுதுவதே மக்களிடம் எளிதில் சென்றடையும் என்று கூறுவோர் பலருண்டு. அப்படி எழுதுவது நம் மொழியை நாமே அழிப்பதற்கு ஒப்பாகும்.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ என்றே மகாகவி பாரதியாரும் பாடியிருக்கிறார்.

அவ்வகையில், தமிழ் வினைச்சொல் மொழி என்பதால் எத்தகைய ஆங்கிலக் கலைச்சொல்லுக்கும் நிகரான அருமையான தமிழ்ச்சொல்லை உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பேருந்து, காவல்துறை போன்ற சொற்களை எடுத்துக்கொள்ளலாம். நடைமுறை வாழ்வில் தமிழர்கள் யாரும் பேச்சின்போது அச்சொற்களைப் பயன்படுத்தாமல், பஸ், போலிஸ் என்றே சொல்கின்றனர். ஆயினும், எழுத்தில் அவற்றைப் பேருந்து, காவல்துறை என எழுதினால் புரியாமல் எவரும் தடுமாறுவதில்லை. அதனால், ஃபேஸ்புக்கை முகநூல் என்றெழுதினால் எதுவும் குறைந்துவிடப்போவதில்லை.

கலைச்சொற்களை ஆக்குவது என்பது பெரும்பணி. மொழி நிலைத்திருப்பதற்குத் தேவையான அரும்பணியும்கூட.

பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்கும்போது அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வழிமுறையில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதனைவிடுத்து, எல்லாச் சொற்களையும் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று குரலெழுப்புவோருக்குச் சிங்கப்பூர் ரயில் நிலையப் பெயர்களே நல்ல விடையாக அமையும்.

பெரும்பாலான பெருவிரைவு ரயில் நிலையங்களின் பெயர்கள் சீன மொழியில் வேறாக இருப்பதைக் காணலாம். சிங்கப்பூர்ச் சீனர்களில் எவரும், அந்நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்லப்படுகிறதோ அவ்வாறே சீன மொழியிலும் அழைக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்புவதில்லை. பிறமொழியில் அமைந்துள்ள நிறுவனங்களின் பெயர்களைக்கூட சீன நாட்டினர் தங்கள் மொழிக்கேற்ப மாற்றி அமைத்து, அழைத்து வருகின்றனர். பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக்கூடாது என்ற கூப்பாடு அங்கே செல்லுபடியாவதில்லை.

தமிழ் முரசும் முடிந்த அளவிற்கு அப்பணியைச் செவ்வனே செய்துவருகிறது.

இன்றைய காலகட்டத்தில் நாடுகள் பலவும் தங்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது, அது ஆங்கிலத்தில் ‘Protectionism’ எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்கு, அனைவர்க்கும் எளிதாகப் புரியும்வண்ணம் ‘தன்னைப்பேணித்தனம்’ என்ற அருமையான சொல்லை ஆக்கி அளித்தவர் தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு வை. திருநாவுக்கரசு.

அதுபோல், மதியுரை அமைச்சர் (Minister Mentor), மகிழ்உலா போன்ற சொற்களையும் குறிப்பிடலாம். பல்லாண்டுகாலமாகப் புழக்கத்தில் இல்லாத மகிழ்உலா கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. எந்த நாட்டிற்கும் செல்லாமல் கடற்பரப்பிலேயே சுற்றுலா சென்ற கப்பல் ‘Cruise to nowhere’ என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டபோது, அதற்கு ‘மகிழ்உலா கப்பல்’ எனப் பெயரிட்டு, அச்சொல்லை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியது தமிழ் முரசு.

இப்படி எல்லாரும் விளங்கிக்கொள்ளும்படியாக எளிமையான சொற்களை ஆக்கியளிக்கும்போது எவரும் குழம்பிப்போவதில்லை.

அதுபோல், உரைநடையில் எழுதும்போது இலக்கண விதிகளை மீறாமல் இருக்க வேண்டும். தமிழ் முரசு முடிந்த அளவிற்கு அவற்றைச் சரியாகப் பயன்படுத்த முனைகிறது.

தமிழ் முரசில் இப்போதுள்ள இளைய தலைமுறையினர் தமிழை முறையாகக் கற்று, பிழையின்றிச் சரியாக எழுத பேரார்வம் காட்டிவருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் என்றும் வளர்தமிழே! அது ஒருநாளும் தேயாது, தேக்கமுறாது! அந்த உயர்தனிச் செம்மொழிக்குத் தொண்டாற்றுவதில் தமிழ் முரசு பெருமைகொள்கிறது.

குறிப்புச் சொற்கள்