தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழ் முரசு 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் அமைச்சர் ஜோசஃபின் டியோ புகழாரம்

நாட்டைக் கட்டியெழுப்பியதில் தமிழ் முரசுக்கு முக்கியப் பங்கு

5 mins read
7f9e7842-a886-4c3e-82ee-bad1122ea2a2
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமைச்சர் ஜோசஃபின் டியோ, எஸ்பிஎச் மீடியா தலைவர் கோ பூன் வான், தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் ஆகியோருடன் தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 3

காலனித்துவம் உட்பட வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து வந்த தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பாராட்டியுள்ளார்.

“சிங்கப்பூர் கடந்து வந்த முக்கிய மைல்கற்களை ஆவணப்படுத்தியது மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்தினர் தங்களது கருத்துகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கான இடத்தைத் தந்துள்ளீர்கள். மேம்பாடுகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றைச் செதுக்கியுள்ளீர்கள்,” என்று அவர் கூறினார்.

தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) உரையாற்றிய திருமதி டியோ, சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரே தமிழ் நாளிதழைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் சமூகத் தலைவர்கள், பங்காளிகள் என ஏறத்தாழ 1,000 பேர் திரண்ட விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

அமைச்சர்கள் இந்திராணி ராஜா, எட்வின் டோங், தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், மூத்த துணையமைச்சர்கள் ஜனில் புதுச்சேரி, முரளி பிள்ளை, தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், டாக்டர் ஹமீது ரசாக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிங்கைத் தமிழரின் தனித்துவம்

மிகக் குறைவான செய்தித்தாள்களே 90 ஆண்டுகளைக் கடந்து வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் தொன்மையான மொழியான தமிழில் செய்திகளை வழங்கும் தமிழ் முரசு கடந்து வந்த பாதையைத் திருமதி டியோ விவரித்தார்.

“காலனித்துவ ஆட்சியைக் கடந்தீர்கள். ஜப்பானியப் படையெடுப்பின்போது செய்தித்தாள் அச்சிடுவதை நீங்கள் தற்காலிகமாக நிறுத்தவேண்டியிருந்தது. சுதந்திரத்தை நோக்கிய சிங்கப்பூரின் பயணம், உங்கள் பயணத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது,” என்றார் அமைச்சர் டியோ.

“இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளைத் தவிர, 200,000க்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட வேறு எந்த நாடும் தமிழில் அன்றாடம் அச்சிடப்படும் பத்திரிகையைக் கொண்டிருக்கவில்லை. 

“பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நேரடி விநியோகம் சாத்தியப்படாமல் இருக்கலாம். அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசு போன்ற நாடுகளில் தற்காலிகமாகத் தங்கும் தமிழ்ச் சமூகத்தினருக்கு இந்தத் தேவை அவ்வளவாக இல்லையெனத் தோன்றியிருக்கலாம்,” என்று அமைச்சர் கூறினார். 

அண்டை நாடான மலேசியாவில் இரண்டு தமிழ்ச் செய்தித்தாள்கள் வெளிவருவதை அவர் சுட்டினார். “ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை 2 மில்லியன். சிங்கப்பூரில் தமிழர்களின் எண்ணிக்கையைப்போல் அது கிட்டத்தட்ட பத்து மடங்கு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்,” என்று திருமதி டியோ கூறினார்.

வரலாற்றின் முதல் வரைவுகள்

செய்தித்துறை வரலாற்றின் முதல் நகலை எழுதித்தருவதாக நீண்டகாலமாகவே வருணிக்கப்படுகிறது. செய்தித்தாள்கள் நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தும்போது, சில நேரங்களில் தவறான வரலாற்றுப் பதிவாக இருந்தாலும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்கள் அவற்றைச் சரிப்படுத்துவர்.

செய்தித்தாளின் இத்தகைய பணிகளுக்கு அப்பாலும் பங்களித்து வந்துள்ள தமிழ் முரசின் பணியை, சுதந்திர சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டான இந்த ஆண்டில் நினைவுகூர விரும்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் முக்கிய மைல்கற்களை வெளியிட்டது மட்டுமன்றி, தமிழ்ச் சமூகத்தினர் தங்கள் கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் வெளியிட தளம் அமைத்துக்கொடுத்துள்ளது தமிழ் முரசு என்றார் அவர்.

1960களில் கம்பத்திலிருந்து பொதுக்குடியிருப்புக்கு சிங்கப்பூர் மாறத் தொடங்கியபோது இந்தியக் குடும்பங்கள் பல, தங்கள் கலாசார, சமய பந்தங்களை இழப்பது பற்றிக் கவலைப்பட்டனர். 

“ஆலயங்களையும் சிறு கோயில்களையும் மையப்படுத்தும் ஒன்றுபட்ட சமூகங்களைச் சேர்ந்த அவர்களுக்குக் கம்பத்து வாழ்க்கை மட்டுந்தான் தெரியும்,” என்றார் அமைச்சர் டியோ.

இத்தகைய சூழலைப் பிரிந்து வாழ்வதில் சிலர் உணர்ந்த பேரிழப்பைத் தமிழ் முரசு ஒப்புக்கொண்டாலும் எதிர்காலக் கனவை, அதாவது மேம்பட்ட வாழ்க்கைத்தரம், நவீன கட்டமைப்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் வேரூன்றியுள்ள பகிரப்பட்ட தேசிய அடையாளம் ஆகியவற்றைத் தமிழ் முரசு சித்திரித்ததாக அவர் கூறினார்.

“தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளின்வழி, பொதுக்குடியிருப்புக்குச் செல்லும் இந்தியச் சமூகத்தினர் தங்கள் இடத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டதாகவும் இழந்ததாகவும் கருதும் உணர்வைத் தணித்து சிங்கப்பூரின் நவீனமயமாதலிலும் முன்னேற்றத்திலும் துடிப்பான பங்கேற்பாக அதனைக் கருதும்படி அச்சமூகத்திற்கு தமிழ் முரசு உதவியது,” என்றும் திருவாட்டி டியோ கூறினார்.

பரிவுடன் புரிதல் ஏற்படுத்திய இதழ்

சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கையில் தமிழ் உள்ளடக்கம் செய்யப்பட்டது பற்றியும் அமைச்சர் டியோ விவரித்தார்.  “உலகப் பொருளியலில் ஒருங்கிணைந்து வளர்ச்சி வாய்ப்பைப் பற்றும் அதேவேளையில் பண்பாட்டிலும் மரபிலும் வேரூன்றி இருக்கவும் நம் குடிமக்களுக்கு உதவுவதில் இருமொழிக் கொள்கை பெரிதும் உதவியுள்ளது,” என்றார் அவர்.

அதே நேரத்தில் ஆங்கிலம் பேசும் உயர்வர்க்கத்தினருக்கும் தாய்மொழிப் பற்றாளர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தவும் சில தரப்புகள் முற்பட்டன.

“அந்தத் தருணங்களிலும் தமிழ் முரசு பாலம் அமைத்து, இருமொழிக் கொள்கையின் நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ள வகைசெய்தது. அதே நேரத்தில் சமூகத்தின் கவலைகளுக்கும் அது குரல்கொடுத்தது.

“தலையங்கங்கள், செய்தி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள், கருத்துக் கட்டுரைகள் (commentaries) ஆகியவற்றின்வழி தமிழ் முரசு, பிளவுகள் ஆழப்படுவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்த உதவியுள்ளது,” என்றார். 1952ல் தொடங்கப்பட்ட மாணவர் மணிமன்ற மலர், மாணவர் முரசு என்ற பெயரில் பள்ளிகளில் இன்றளவும் பயன்பட்டு வருவதைத் திருமதி டியோ சுட்டினார்.

“உங்களில் பலருக்கு தமிழ் முரசுடன் வளர்ந்த நினைவு இருக்கலாம். உங்கள் பள்ளிப்பாடங்களுக்காக நீங்கள் அதனைப் படித்திருக்கலாம்,” என்று அவையினரிடம் அவர் கூறினார்.

நெருக்கடியில் துணை நின்றது

கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்ட அமைச்சர் டியோ, தமிழ் மட்டும் தெரிந்தோர்க்கு, முக்கியமான பொதுச் சுகாதாரத் தகவல்களைத் தமிழ் முரசு உடனுக்குடன் வழங்கியதாகக் குறிப்பிட்டார். அத்தகையோரில் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர் என்றார் அவர்.

“கிருமிப்பரவலின்போது களத்தில் பணியாற்றிய மருத்துவ நிபுணர்கள் முதல் தொண்டூழியர்கள் வரை இந்தியச் சமூகத்தில் சாமானிய நாயகர்களின் சேவைக்கும் தியாக உணர்வுக்கும் வெளிச்சம் காட்டியுள்ளீர்கள்.

“இத்தகையோரின் அனுபவக் கதைகள் சமூகத்தை ஒன்றுபடுத்தித் தூக்கிநிறுத்தின,” என்று அமைச்சர் கூறினார்.  

இளையரை எட்டும் முயற்சி

இளம் பார்வையாளர்களை எளிதில் சென்றுசேரும் வகையில் தமிழ் முரசு அண்மைய பொதுத்தேர்தல் பற்றிய தகவல்களை வழங்கியதை அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

இளம் வாக்காளர்களின் கனவுகளைப் பிரதிபலிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் குறுங்காணொளிகளையும் தமிழ் முரசு வெளியிட்டது. அவை, தேர்தலைப் பற்றி முதன்முறை வாக்காளர்களுக்கு விளக்க உதவின.  

தமிழ் முரசின் கடப்பாடுமிக்க ஊழியரணி இல்லாமல் இந்த நற்பணி சாத்தியமில்லை எனக் கூறிய திருமதி டியோ, இந்நிழ்ச்சியில் தமிழ் முரசின் முந்தைய ஆசிரியர்கள் கெளரவிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகக் கூறினார். 

முன்னாள்,  இந்நாள் ஆசிரியர்கள், பணியாளர்கள் என ஒவ்வொருவருமே தமிழ் முரசின் பயணத்திற்கு முக்கியமானவர்கள், எங்கள் பாராட்டுக்கு உரியவர்கள்என்றார் அவர்.

“எதிர்காலத்தை நோக்கிச் செல்கையில், குடிமக்கள் இடையே விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் ஈடுபாட்டையும் வளர்க்க உதவும் வகையில் சமூகத்திற்குத் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும்படி தமிழ் முரசை ஊக்குவிக்கிறேன்.

“இது எளிதான செயலன்று. தொழில்நுட்ப இடையூறுகளும், மாறிவரும் பயனாளர் விருப்பங்களும் புதிய அலைகளாக குறுக்கிடக்கூடும்,” என்று அவர் கூறினார். 

மூத்தோர் உள்ளிட்ட சிங்கப்பூரர்கள் இணையத்தின்வழி அதிகப்படியாக அல்லது அது வழியாக மட்டும் செய்திகளை உள்வாங்குவர். அதே நேரத்தில் உலகெங்கிலும் பெருகிவரும் ‘இலவச’ செய்திகளால் களைத்துப்போகும் பலர், குறிப்பாக இளையர்கள், செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தை இழக்கலாம் என்றார் அமைச்சர்.

“எனவே, தமிழ் முரசு புத்தாக்க முறையில் முயன்று, புதிய படைப்புகளை உருவாக்கி வாசகர்களுடன் உறவுகளை வலுப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதைக் கண்டு அகமகிழ்கிறேன்,” என்றார் அமைச்சர்.

“பல்வேறு தலைப்புகள் சார்ந்த விவகாரங்கள் குறித்து நீங்கள் ஏற்பாடு செய்துள்ள இளையர் கருத்தரங்கங்கள், அடுத்த தலைமுறையினருடன் ஆழமான, அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்க உதவும். 

“2023ல் அறிமுகமான தமிழ் முரசின் செயலி வரவேற்பு பெற்றுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற உலக ஊடக விருதுகளில் சிறந்த புதிய மின்னிலக்கப் படைப்புப் பிரிவில் வழங்கப்பட்ட வெள்ளிப் பரிசின் வழி அனைத்துலகச் செய்தி ஊடகச் சங்கம் அதன் முயற்சிகளைப் பாராட்டியது தமிழ் முரசுக்கு ஊக்கமளிப்பதாக அமைகிறது,” என்று திருவாட்டி டியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்