மரியா ஹெர்ட்டாக் கலவரம் வெடித்த மறுநாள், அக்கலவரம் பற்றிய முழுமையான அறிக்கையை டிசம்பர் 12, 1950ல் வெளிவந்த தமிழ் முரசுப் பிரதிகள் அன்றைய வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்தன.
“வீதிகளில் நடந்துகொண்டிருக்கும் காரியங்கள், இஸ்லாத்தின் உபதேசங்களுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும்,” என்று கலவரத்தைப் பற்றி அன்றைய இஸ்லாமிய சமய போதகர் மெளலானா சித்திக் வெளியிட்ட கருத்தை செய்தித்தாளில் வெளியிட்டு மக்களுக்கு நீதியையும் அமைதியையும் புகட்டியது அன்றைய முரசு.
1964ல், நபிகள் நாயகம் பிறந்த தினத்தன்று சிங்கப்பூரில் நடந்த மற்றொரு கலவரத்திற்கு மறுநாள் அப்போதைய அரசுத் தலைவரும் சிங்கப்பூரின் வருங்கால அதிபராகவும் இருக்கவிருந்த யூசோஃப் இஷாக், எல்லாச் சமயத்தினரும் தங்களுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்த புனித நாளைப் பயன்படுத்தும்படியான நல்லிணக்க வேண்டுகோளையும் தமிழ் முரசு அன்று வெளியிட்டது.
தனி நாடாகச் சுதந்திரம் பெற்ற புத்தம்புது சிங்கப்பூர், சமய சார்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அதே நேரத்தில் சமயத்தை வெறுக்காமல் சமூக ஒற்றுமைக்கான தூணாகப் பயன்படுத்திக்கொண்டது. இதிலும் தமிழ் முரசு முன்னோடிதான்.
தமிழ் முரசு எந்தவொரு சமயத்தையும் தூக்கிப்பிடிப்பதில்லை. மாறாக, இதழின் தொடக்கக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்து பிராமண சமய நம்பிக்கைகளைச் சாடி விமர்சித்த கட்டுரைகளை நம்மால் காண முடிகிறது.
அதே நேரத்தில் தமிழ் முரசு, அனைத்து மக்களின் சமய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தமிழர்களின் சமயத் தேவைகளுக்கு உதவி புரிகிறது.
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலப் பற்றுமானம், கோயில் விழாக்கள், பண்டிகைக்கால நல்ல நேரங்கள், நோன்புத் துறப்பு நேரம் ஆகியவற்றைப் பதிப்பித்து, சராசரி மக்கள் தெரிய விரும்பும் தகவல்களை எளிதில் சேர்க்கும் சிங்கப்பூரின் ஒரே ஊடகம் தமிழ் முரசு.
முரசு செயலியிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் காணொளிகள், நேரலைகள், நிழற்படத் தொகுப்புகள் எனப் பல்வேறு புதிய வடிவங்களைப் பெற்று வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சேவைக்கு இதழின் ஊக்கம்
தீபாவளி, தைப்பூசம், தீமிதி, விசாக தினம், நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை தினங்களுக்குப் பின்னால் பல சமய அன்பர்கள் மனம் உவந்து தந்த உழைப்பை நம் கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.
அத்தகைய கட்டுரைகள் கோயில் தொண்டர்களுக்குப் பெரிதும் ஊக்கமளிப்பதாகப் புனிதமரம் பாலசுப்ரமணியர் ஆலயத் தலைவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“சிங்கப்பூரின் ஒரே தமிழ் மொழி நாளிதழான தமிழ் முரசு, தமிழ் இந்துக்களின் குழு உணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
தமிழ் முரசு பத்திரிகைப் பிரதிகளை ஆலயங்கள் வாங்கி பக்தர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வந்த ஏற்பாடு குறித்து கேலாங் ஈஸ்ட் சிவன் கோயிலின் நிர்வாகத் தலைவர் யோகநாதன் அம்மையப்பன் விவரித்தார்.
“எங்களது சேவையை அங்கீகரித்து கோயில் சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழ் முரசு விளம்பரப்படுத்தும். இந்துச் சமூகத்தினர் பலர்க்கு சமயச் சிறப்பு நாள்கள், பூஜைகள், உற்சவங்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்து வருவதில் தமிழ் முரசுக்கு முக்கியப் பங்களிப்பு இருந்து வந்தது,” என்று அவர் கூறினார்.
அதுபோலவே, தமிழ் முஸ்லிம் சமூகத்தின் நீடித்த மொழிச் சேவை, இந்தப் பத்திரிகைக்குச் செறிவூட்டியுள்ளது.
சிங்கப்பூரில் வாழும் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் முரசை கணிசமாக வாங்கி விளம்பரங்களை பதிவுசெய்து முழுமனதோடு ஆதரவளித்து வருவதையும் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முகம்மது பிலால் குறிப்பிட்டர்.
வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் தமிழ் முரசு வாங்கப்பட்டு வருவதாக பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.மு.யூ. முஹம்மது ரஃபீக் தெரிவித்தார்.
“ஆன்மிக, மார்க்கச் செய்திகளை ஒழுங்காகவும் முறையாகவும் சரியாகவும் தமிழ் முரசு தெரிவித்து வருகிறது. நாம் அனைவரும் தமிழர்கள், நம் தாய்மொழியில் சமய செய்திகளைப் படிக்கும்போது செய்தி நம்மை மேலும் சென்றடைகிறது,” என்று அவர் கூறினார்.
அரிய தகவல்களும் ஆழ உணர்வுகளும்
எல்லோர்க்கும் வழக்கமாகத் தெரிந்த சிறப்பு நாள்களைப் பற்றி மட்டுமன்றி பொதுமக்களால் பரவலாக அறியப்படாத சமயத் தகவல்களையும் வாசகர்களுக்குத் தமிழ் முரசு அறியத் தருகிறது.
கிறிஸ்துவர்களின் குருத்தோலை ஞாயிறு, இந்துக்களின் மார்கழி மாத இலக்கியம், இஸ்லாத்தின் லைலத்துல் கத்ர் என எங்கள் கட்டுரைகளில் இயன்றவரை புதுமைகளைப் புகுத்த முயல்கிறோம்.
நோன்புக் கஞ்சி தயாரித்தல், முப்பரிமாண அச்சு முறையால் நாயன்மார் உருவ பொம்மைகளை உருவாக்குதல், புனித சனி முதல் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இமாம்களாகச் செயல்படும் இளையர்கள், ஆலய யாத்திரை போன்ற அங்கங்களை நுட்பமாகக் கண்டு பொதுவெளிக்கு அறிமுகப்படுத்துகிறது.
சைவ சமயத்தின் மெய்யியலில் காணப்படும் நுட்பமான கூறுகளை விளக்கும் நூல் வெளியீடுகள், உரை நிகழ்சிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை தமிழ் முரசு வெளியிட்டுள்ளதை சிங்கப்பூர் சைவ சித்தாந்த மன்றத் தலைவர் முனைவர் மீனாட்சி சபாபதி பாராட்டுகிறார்.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், சமயம் தொடர்பான செய்திக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்றும் இந்து நிலையத் தலைவர் டாக்டர் வரப்பிரசாத் கேட்டுக்கொண்டார்.
சமயங்களிடையே உள்ள சிறுபான்மைப் பிரிவினர் பற்றிய கட்டுரைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன. இந்துக்களில் வைணவர்கள், ஷியா முஸ்லிம் பிரிவினர், சமணர்கள், ஸரத்துரஸ்தர்கள், சோக்கா பெளத்தர்கள் எனத் தமிழ் பேசும் மிகச் சிறுபான்மைச் சமயத்தவரைப் பற்றியும் தமிழ் முரசு அண்மை சில ஆண்டுகளாகக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தை ஆழமான அக்கறையுடன் பேணுவதுடன், சமய நல்லிணக்கத்திற்கு அரிய தொண்டாற்றி வருவதாக வைணவ இயக்கமான சிங்கப்பூர் ராமானுஜர் சங்கச் செயலாளர் எஸ்.முகுந்தன் கூறினார்.
“ராமானுஜரின் சமத்துவம் போற்றும் உணர்வு, தமிழ் முரசின் கட்டுரைகளிலும் காண்கிறேன்,” என்றார் திரு முகுந்தன்.
இன நல்லிணக்க இயக்கங்களுக்கு ஆதரவு
சிங்கப்பூருக்குள் எந்நாளும் சமய நல்லிணக்கம் தொடர வேண்டும் என்பது தமிழ் முரசின் திண்ணமான விருப்பம். அறிவுபூர்வமான நல்லிணக்கத்திற்கு ஒருவர் தன் சொந்த சமயத்தைப் பற்றியும் பிற சமயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
சமய அறிவு, சக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கான பாலம்.
தொடர்ந்து பாலம் கட்டுங்கள், உங்களுக்குத் தமிழ் முரசு துணைநிற்கும்.