தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வலையொளிப் பதிவு ஒன்றைத் தமிழ் முரசு வெளியிட்டுள்ளது. இளையர்களின் கண்ணோட்டத்தில் தீபாவளி என்றால் என்ன என்பதை ஒட்டி அது அமைந்துள்ளது.
நான்கு இளையர்கள் கலந்துகொண்ட இந்த வலையொளியை தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி வழிநடத்தினார். சிறுவயதில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியதற்கும் தற்போது தீபாவளி கொண்டாடுவதற்குமான வேறுபாடுகளைப் பற்றி இளையர்கள் பேசினர்.
மேலும், வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துவரும் தற்போதைய சூழல், உலகத்தில் நிகழும் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் தீபாவளி கொண்டாடும் விதம் எவ்வாறு மாறியுள்ளது போன்ற தகவல்களும் வலையொளியில் இடம்பெற்றிருந்தன.
சிறுவயதில் தீபாவளி கொண்டாடியதை நினைவுகூர்ந்த சிறப்பு விருந்தினர்கள், குடும்பப் பிணைப்பை மறவாது தீபாவளி கொண்டாடுவதை உன்னதமாகக் கருதினர்.
“என் அப்பா ஒரு பஞ்சாபி என்பதால் நான் என் அப்பாவின் உறவினர்களுடன் தீபாவளியை வித்தியாசமாகக் கொண்டாடுவேன். பஞ்சாபிகள் அதிக ஆரவாரமின்றி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்,” என்று பொதுத் தொழிற்சங்கத்தில் பணியாற்றும் லலிதா கரம்ஜித் சிங் கூறினார்.
“ஒரு முறை புதிதாகச் செய்து பார்க்கலாம் என்று நாங்கள் மோட்டிச்சூர் லட்டு செய்தோம். அது மிக ருசியாக இருந்தது. என்னதான் கடைகளில் வாங்கினாலும் வீட்டில் செய்து சாப்பிடும் சுவை தனிதான்,” என்றார் தொடக்கக் கல்லூரியில் பயிலும் மாணவி காமாட்சி.
இணைய வணிகம் பிரபலமாக இருக்கும் இவ்வேளையில் வலையொளியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், கடைக்கு நேரடியாகச் சென்று பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
“பண்டிகைக் காலம் வந்தாலே என் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாடை வாங்க தேக்கா செல்வதுதான் என் நினைவுக்கு வரும். இது போன்ற விழாக்காலத்தில் அவர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் பிரசாத்.
தொடர்புடைய செய்திகள்
“நான் என் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். பலகாரங்களைக் கட்டுப்பாட்டுடன் சாப்பிட்டுவிட்டு தீபாவளி முடிந்தவுடன் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவேன்,” என்றார் மிச்சல் யோகேன்.