தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சிற்றூரில் பிறந்து வளர்ந்தேன்.
என் தந்தையார் சிங்கப்பூரில் பாதுகாவலராகப் பணியாற்றினார். அவரைப் போல் நானும் சிங்கப்பூரில் என் எதிர்காலத்தை உருவாக்க விரும்பி, 1955 அக்டோபர் மாதம் என் 15ஆம் வயதில் நான் சிங்கப்பூருக்கு வந்தேன்.
அப்பொழுதெல்லாம் இங்கு வேலை கிடைப்பது மிகக் கடினம். என் தந்தையார் தமக்குத் தெரிந்தவர்மூலம் ரோச்சோர் கேனல் சாலையில் அமைந்திருந்த விக்டோரியா அச்சகத்தில் அச்சுக் கலை பயிலும் வாய்ப்பை எனக்கு வாங்கித் தந்தார்.
சம்பளம் இல்லாவிட்டாலும் அச்சுக் கோப்புத் தொழிலைக் கற்கும் நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. நான் அங்கு 1956 ஜனவரியில் சேர்ந்தேன்.
ஐந்து மாதங்கள் அச்சுக்கோப்பதைக் கற்றபின் ஓவன் ரோட்டில் அமைந்திருந்த கே பி அச்சகத்தில் ஆறு மாதங்களும் பின்பு கிண்டா ரோட்டில் அமைந்திருந்த ‘எகனாமிக் பிரஸ்’சில் ஓராண்டும் வேலைசெய்தேன்.
தொடக்கத்தில் கே பி அச்சகத்தில் எனக்கு மாதம் $30 சம்பளம் கிடைத்தது. மாதாமாதம் $10 சம்பள உயர்வு கிடைத்தது. ‘எக்கனாமிக் பிரஸ்’சில் $100 மாதச் சம்பளம் கிடைத்தது.
தமிழ் முரசு புகழ்பெற்ற நாளிதழாக இருந்தது. வேலைசெய்வதற்கு அது நல்ல இடம் எனக் கேள்விப்பட்டதால் நான் அங்கு நேரடியாகச் சென்று வேலை கேட்டேன்.
ஒருவரை வேலைக்கு எடுப்பதற்குமுன் தமிழவேள் கோ சாரங்கபாணியே அவரை நேர்காணல் செய்வது வழக்கம். அப்படித்தான் நான் அவரை முதன்முதலில் கண்டேன். மறக்கமுடியாத அனுபவம்.
தொடர்புடைய செய்திகள்
முதல் முறை அவர் என்னை வேலைக்கு எடுக்கவில்லை. ஆனால் நான் மீண்டும் அவரைச் சென்று பார்த்ததும் அவர் என்னை அச்சுக்கோப்பாளராக $100 மாதச் சம்பளத்துக்கு வேலைக்கு எடுத்தார். இரு மாதங்களில் என் சம்பளம் $120ஆக உயர்ந்தது. அதன்பின் படிப்படியாக உயர்ந்தது.
1958ல் தமிழ் முரசு 190-192 லாவண்டர் ஸ்திரீட்டில் இருந்தபோது நான் அங்கு அச்சுக் கோப்பாளராகச் சேர்ந்தேன்.
கோ சாரங்கபாணியின் தலைமையின்கீழ் பணியாற்றிய அனைவருக்கும் அவர்மீது மிகுந்த மரியாதை இருந்தது; சற்று அச்சமும் இருந்தது. என்மீது அவர் அதிகப் பிரியம் வைத்திருந்தார்.
தமிழ் முரசுடனான எனது பயணம் தொடங்கியது
கட்டடத்தின் மேல்மாடியில் கோ.சாரங்கபாணியும் மற்ற செய்தியாளர்களும் செய்திகளைத் தாளில் எழுதிக் கொடுக்கக் கொடுக்க, நானும் சக ஊழியர்களும் உலோக எழுத்துருக்களைக் கோத்து பத்திகளாக்கித் தருவோம்.
பின்பு, பக்கம் செய்பவர் அந்தப் பத்திகளையும் தலைப்பையும் சேர்த்து பக்கத்தை வடிவமைப்பார். அலுவலகத்தின் கீழ்மாடியில் இருந்த அச்சு இயந்திரத்துக்கு அனுப்புவார்.
எவ்வளவு அச்சுக்கோத்தோமோ அதை அளந்து, ஒரு பத்தி, ஓர் அங்குலத்திற்கு 10 காசு என்று தொடக்கத்தில் சம்பளம் கொடுத்தார்கள். அன்றாடம் 40 முதல் 60 அங்குலம் வரை எங்களால் அச்சுக்கோக்க முடிந்தது. மாதத்துக்கு $100 முதல் $165 வரை சம்பாதிக்க முடிந்தது.
சவால்மிக்க பணி
நாள் முழுவதும் நின்று வேலை பார்க்க வேண்டும். தமிழ் எழுத்துகளை ஒவ்வோர் எழுத்தாகக் கோக்க வேண்டும்.
சின்ன சின்ன எழுத்துகள் கொட்டிவிட்டால் மீண்டும் அவற்றைக் கோத்து செய்தியாக்குவது எளிதான செயலன்று.
அவ்வாறு எழுத்துகளை அடுக்கிச் செய்யும் பக்கங்களை, கணினியில் வடிவமைப்பது வடிவமைப்பது போல் விரும்பியபடி மாற்ற முடியாது. அளந்து அளந்து செய்ய வேண்டும். அதனால் முதல் முறையே மிகச் சரியாகச் செய்துவிட வேண்டும்.
ஓராண்டு அச்சுக்கோத்தபின் நான் ஈராண்டுகள் மெய்ப்பு பார்த்தேன்.
1963ல் கூடுதல் சம்பளம் கோரி நடந்த வேலை நிறுத்தத்தில் நானும் கலந்துகொண்டேன். ஓராண்டுக்கு தமிழ் முரசு வெளிவரவில்லை; தமிழ் முரசு அலுவலகமும் மூடியது. அப்போது நான் வருமானத்துக்குப் பல்வேறு வேலைகளைச் செய்தேன். பெட்ரோல் நிலையத்திலும் பணியாற்றினேன்.
வேலை நிறுத்தம் முடிந்து ஜூலை 1964ல் அலுவலகம் புதிதாக 139-141 லாவண்டர் ஸ்திரீட்டில் திறந்தபோது நான் மறுபடியும் தமிழ் முரசில் அச்சுக்கோப்பாளராகவே சேர்ந்தேன்.
அச்சுக்கோக்கும்போது கைகளில் மை படியும். மண்ணெண்ணெயில் கையை நனைத்துக் கழுவ வேண்டும். அதனால் அச்சுக் கோப்பதற்கு ஊழியர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது.
அப்போதுதான் பெண்களும் அச்சுக் கோப்பாளர்களாகச் சேர்ந்தனர்.
நாளடைவில் நான் பக்கம் செய்பவராக மாறினேன். பத்து, பதினைந்து பேர் அச்சுக்கோத்து பத்திகளை எனக்குத் தருவார்கள். நான் அவற்றைப் பக்கங்களாக அமைப்பேன். பல ஆண்டுகள் நான் ஒரே ஆளாக எட்டு பக்கங்கள் வடிவமைத்தேன்.
பிழை திருத்துதல், ஃபோர்மென் போன்ற பணிகளையும் செய்தேன்.
பின்பு 1990களில் தமிழ் முரசு தொழில் நுட்பத்தை அரவணைத்தபோதும் பின்பு முழுமையாகக் கணினிமயமானபிறகும் தட்டச்சு கற்று, மென்பொருள்களை இயக்கவும் கற்றுக்கொண்டேன்.
இன்றும் தொடர்ந்து செய்தித்தாளை மெய்ப்பு பார்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன்.
தமிழ் முரசு இத்தனை ஆண்டுகளாகப் பல பரிமாணங்களைப் பார்த்துவந்துள்ளது. காலம் பல கடந்து சவால்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் சிங்கப்பூரின் ஒரே நாளிதழின் 90வது ஆண்டுப் பயணத்தில் அதிகக் காலம் என் ஈடுபாடும் இருந்துள்ளது என்பதை எண்ணும்போது மனநிறைவடைகிறேன்.
அடுத்த தலைமுறையின் முயற்சியால் அது இன்னும் பல்லாண்டுகள் நீடிக்கவேண்டும் என்பதே என் ஆசை.