மலேசியா வரை கோலோச்சும் தமிழ் முரசு

3 mins read
b6c9e51e-6acc-452f-9753-c485eda1199d
அன்றைய காலத்தில் சிலாங்கூரில் நடந்த தமிழ் இளைஞர் மணிமன்றத் திறப்பு விழா. - படம்: சாரங்கபாணி குடும்பம்
multi-img1 of 2

மலேசியாவெங்கும் முன்னணி நாளிதழாகத் திகழ்ந்த தமிழ் முரசை மலேசியர்கள் பலர் பெருமையுடன் நினைவுகூருகின்றனர். 1940களில் கோலாலம்பூரில் தமிழ் முரசு அலுவலகம் வைத்திருந்தது. சிங்கப்பூர் அலுவலகத்திலிருந்து மாலைப் பிரதியும் கோலாலம்பூர் அலுவலகத்திலிருந்து காலைப் பிரதியும் அச்சிடப்பட்டன.

“மலேசியாவில் அப்போது பெரிய அளவில் பொழுதுபோக்கு கிடையாது. தமிழ் தெரிந்தவர்களுக்குப் பொழுதுபோக்கு என்றால் தமிழ் முரசு வாசிப்பதுதான்,” என்றார் 88 வயது முனைவர் முரசு நெடுமாறன்.

நெடுமாறன் என்ற தமது பெயருக்கு முன்னாள் ‘முரசு’ என்ற அடைமொழியைச் சேர்த்ததற்கு தமிழ் முரசுமீதுள்ள அலாதி பிரியமும் ஒரு காரணம் என்றார் முனைவர் நெடுமாறன்.

மலேசியாவில் மட்டும் தமிழ் முரசு 15,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.

தமிழ் முரசின் பல சமூக முயற்சிகள் மலேசியத் தமிழர்களை வெற்றியின் ஏணியில் ஏற்றிவிட்டிருக்கிறது.

சமூக அளவில், அரசியல் ரீதியாக, கல்வி, விளையாட்டு எனப் பல துறைகளில் மலேசியத் தமிழர்கள் நட்சத்திரங்களாக மின்ன தமிழ் முரசு அடித்தளம் அமைத்தது.

அதில் மாணவர் மணிமன்றம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் பங்கும் முயற்சிகளும் இன்றும் தொடர்கின்றன.

தமிழ் முரசு என்றாலே மாணவர் மணிமன்றத்தையும் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையையும் குறிப்பிடாத மலேசியர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவை மலேசியத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிட்டன.

தொடர்புடைய செய்திகள்

“மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுக்கெல்லாம் தாய்மடியாக விளங்கியது தமிழ் முரசின் மாணவர் மணிமன்றம்,” என்றார் முனைவர் முரசு நெடுமாறன்.

1950களில் தமிழ் முரசில் வெளிவந்த மாணவர் மணிமன்ற பகுதியில் பல மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
1950களில் தமிழ் முரசில் வெளிவந்த மாணவர் மணிமன்ற பகுதியில் பல மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை

“தமிழ் முரசில் வெளிவந்த மாணவர் மணிமன்றம் பகுதி 1950களில் மலாயா தமிழ் மாணவர்களிடையே பேரெழுச்சியை ஏற்படுத்தியது. மாணவர் மணிமன்றத்தில் எப்படியாவது சேரவேண்டும், தங்கள் படைப்புகள் அதில் இடம்பெறவேண்டும் என்று மாணவர்களை ஏங்க வைத்தது மாணவர் மணிமன்றம்,” என்றார் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை பொதுச் செயலாளர், கோபிந்தரன் அர்ஜுனன், 33.

அந்த அளவுக்கு எழுத்துமீது தாகமாயிருந்த தமிழ் மாணவர்களை மாணவர் மணிமன்றத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க எளிய முறையை அறிமுகம் செய்தார் தமிழ் முரசை நிறுவிய தமிழவேள் கோ. சாரங்கபாணி.

“தமிழ் முரசின் மாணவர் மணிமன்றத்தில் வரும் கூப்பன்களை மாணவர்கள் சேகரிக்க வேண்டும். ஐந்து கூப்பன்களைச் சேகரித்து அனுப்பிவைத்தால் போதும் உறுப்பினராகிவிடலாம்,” என்ற திரு கோபிந்தரன், மாணவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை, மணிச்சின்னம் பதித்த முத்திரை (Badge) ஆகியவை வழங்கப்பட்டன என்றார்.

மாணவர் மணிமன்றத்தில் உறுப்பினராகச் சேர ஐந்து கூப்பன்களைச் சமர்ப்பிக்கவேண்டும். உறுப்பினர்களின் படைப்புகள் மாணவர் மணிமன்ற பகுதியில் இடம்பெறும்.
மாணவர் மணிமன்றத்தில் உறுப்பினராகச் சேர ஐந்து கூப்பன்களைச் சமர்ப்பிக்கவேண்டும். உறுப்பினர்களின் படைப்புகள் மாணவர் மணிமன்ற பகுதியில் இடம்பெறும். - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை

உறுப்பினர்களாகச் சேரும் மாணவர்களின் கட்டுரைகள், கவிதைகள் போன்றவை மாணவர் மணிமன்றத்தில் பிரசுரிக்கப்படும். மாணவர்களின் எழுத்தாற்றலும் பட்டை தீட்டப்பட்டது.

இளையர்களிடமும் மாணவர் மணிமன்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது. “1956 ஜனவரி 14ஆம் தேதி பினாங்கு மாநிலத்தில் முதல் தமிழ் இளைஞர் மணிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு வித்திட்டது தமிழ் முரசின் மாணவர் மணிமன்றம்தான்,” என்றார் திரு கோபிந்தரன்.

பின் 1964ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அங்கீகரிக்கப்பட்டது.

“இளையர்களுக்கான தமிழ் மணிமன்றப் பேரவை, தமிழ் முரசின் மாணவர் மணிமன்றத்தில் இருந்து தொடங்கியது. இன்று தேசிய அளவில் செயல்படும் பேரவையின் கீழ் 10 மாநிலங்களின் 36 மாவட்டங்களில் ஏறக்குறைய 200 இளைஞர் மன்றங்கள் செயல்படுவதை திரு கோபிந்தரன் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளுக்கும் முன் தொடங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் இன்று ஆயிரக்கணக்கான இளையர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கும் முன் தொடங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் இன்று ஆயிரக்கணக்கான இளையர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை
பல ஆண்டுகளுக்கும் முன் தொடங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் இன்று ஆயிரக்கணக்கான இளையர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கும் முன் தொடங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் இன்று ஆயிரக்கணக்கான இளையர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை தமிழவேள் கோ சாரங்கபாணியை நினைவுகூர அவரது புகைப்படம் பதிக்கப்பட்ட அஞ்சல் தலைகளை 2014ஆம் ஆண்டு வெளியிட்டன.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை தமிழவேள் கோ சாரங்கபாணியை நினைவுகூர அவரது புகைப்படம் பதிக்கப்பட்ட அஞ்சல் தலைகளை 2014ஆம் ஆண்டு வெளியிட்டன. - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவை

இன்றும் பல மலேசிய இளையர்களை வெற்றிப்பாதையில் கூட்டிசெல்லும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை.

தலைமைத்துவப் பண்புகள், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகிய திறன்களை இளையர்களிடையே வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு ஏற்பாடு செய்கிறது.

“நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் எம் சரவணன், மலாக்கா மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் திரு வி.பி. சண்முகம், முன்னாள் துணையமைச்சர் திரு க.குமரன், ராகா வானொலிப் படைப்பாளர் உதயா போன்ற பல தமிழர்களை உயர்த்திவிட்டிருக்கிறது இளைஞர் மணிமன்ற பேரவை,” என்று திரு கோபிந்தரன் பகிர்ந்தார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம் சரவணன் (இடமிருந்து மூன்றாவது) போன்ற பலரை வளர்த்துவிட்ட பெருமை தமிழ் முரசு அடித்தளம் போட்ட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையைச் சேரும்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம் சரவணன் (இடமிருந்து மூன்றாவது) போன்ற பலரை வளர்த்துவிட்ட பெருமை தமிழ் முரசு அடித்தளம் போட்ட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையைச் சேரும். - படம்: மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை

தமிழ் முரசின் பங்களிப்பை வரலாற்றில் பதிக்கவும் அதன் நீண்டகால வரலாற்றைக் கொண்டாடவும் கெடா மாநிலத்தில் உள்ள ஜாலான் பாயா பெசார் என்ற தமிழ்ப் பள்ளிக்கு 2018 மார்ச் 1ஆம் தேதி கோ சாரங்கபாணி தமிழ்ப் பள்ளி என்று அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றப்பட்டது.

1974ஆம் ஆண்டு தமிழ் முரசு மலேசியாவைவிட்டு நிரந்தரமாக நின்றுவிட்டாலும் இணையத்தில் இன்றும் பல மலேசியர்கள் தமிழ் முரசுடன் தொடர்ந்து இணைந்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்