தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் நாளேடும் இதழ்களும் சமூகத்தின் அடையாளம்: அமைச்சர் சண்முகம்

3 mins read
13a44656-02e8-4c41-bc17-d245cd45818f
‘செம்மொழி’ காலாண்டு இலக்கிய இதழின் 25ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி, தேசிய நூலகக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் சனிக்கிழமை (மே 17) மாலை நடைபெற்றது. - படம்: த. கவி
multi-img1 of 2

சிங்கப்பூரில் தமிழில் வெளிவரும் நாளேடும் சமூக இதழ்களும் சிறிய நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகின்றன என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

‘செம்மொழி’ எனும் காலாண்டு இலக்கிய இதழின் 25ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், தமிழ்மொழியில் வெளிவரும் நாளிதழ், இதழ்கள், நூல்களைப் படிக்கவேண்டும் என்றும் அவற்றுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரில் தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய தமிழ் முரசு நாளிதழை நிறுவிய தமிழவேள் கோ சாரங்கபாணியின் முக ஓவியத்தை ஏந்தி செம்மொழி வெளிவருவதைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், தமிழ் முரசு 90ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாட இருப்பதையும் சுட்டினார்.

தமிழவேள் நற்பணி மன்றத்தின் செய்திக் கடிதமாக 1999ஆம் ஆண்டு செம்மொழி தொடங்கியதையும் அதன் ஆசிரியராகக் கடந்த 15 ஆண்டுகளாகத் திரு எம். இலியாஸ் செம்மையான பங்காற்றி வருவதையும் குறிப்பிட்டு அமைச்சர் பாராட்டினார்.

பரபரப்பான சூழலிலும் விரைந்து மாற்றம் காணும் சிங்கப்பூரில் தொடர்ச்சியான தமிழ்த் தொண்டு ஆற்றுவது எளிதான செயலன்று என்று கூறிய திரு சண்முகம், நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவையாற்றும்போது குடும்பத்துக்காகச் செலவிடும் நேரம் குறையும் என்றும் அதை அவர்களின் அர்ப்பணிப்பாகக் கருதவேண்டும் என்றும் கூறினார்.

செம்மொழி இதழ் இலவசமாக வழங்கப்படுவதையும் அண்மையில் திரு இலியாஸ் எழுதித் தொகுத்து, கவிஞர் கனிமொழி கருணாநிதி வெளியிட்ட ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூலின் விற்பனைத் தொகை அனைத்தும் சமூகப் பணிகளுக்காக வழங்கப்பட்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்துக்கும் இலக்கியப் பணிகளுக்கும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஆற்றும் பங்களிப்பையும் அவர் சுட்டினார்.

தேசிய நூலகக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் சனிக்கிழமை (மே 17) மாலை நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரையும் வருகையாளர்களையும் வரவேற்றுப் பேசிய இதழாசிரியர் இலியாஸ், 25 ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

“எனக்குப் பின், இவ்விதழை மொழியார்வமும் சமூக ஆர்வமும் மிக்க இளையர்கள் ஏற்றுநடத்த வேண்டும்,” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செம்மொழி இதழ்கள் பலரால் தொகுக்கப்பட்டு வெளிவருவதையும் அவர் குறிப்பிட்டார். வெள்ளிவிழாவை முன்னிட்டு செம்மொழி இதழ் சார்பில் தமிழ்மொழிக்கும், கல்வி உள்ளிட்ட பிற நற்பணிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வள்ளல் அப்துல் ஜலீலுக்கு செம்மொழிக் காவலர் விருது வழங்கப்பட்டது.

தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் தமிழவேள் கோ சாரங்கபாணியின் தொண்டராகப் பணியாற்றிய ப தியாகராஜனுக்கு தமிழவேள் தமிழ்ச்சுடர் விருது வழங்கப்பட்டது.

இவ்விதழை 1999ஆம் ஆண்டு தொடங்கிய வீ தமிழ்மறையானுக்குச் செம்மொழி இதழ்ச்சுடர் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து, செம்மொழி இதழில் வெளியான பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு ‘செம்மொழி நேர்காணல்கள்’ எனும் நூலாக வெளியீடு கண்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா தினகரன், தமிழ் முரசு ஆசிரியர் த ராஜசேகர், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, ‘சிராங்கூன் டைம்ஸ்’ இதழாசிரியர் ஷா நவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதுவரை வெளியீடு கண்ட செம்மொழி இதழ்கள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்