உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் இளையர்களிடையே தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் கலாசாரப் பண்புகளையும் ‘வேகம் விவேகம்’ என்ற நிகழ்ச்சி புகட்டியது.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 21) உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 மாணவர்கள் கூடினர்.
தமிழர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழா அமைப்பு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், அப்துல் கலாம் இலட்சியக் கழகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி நடத்தப்படும் பல்வேறு கற்றல் நிகழ்ச்சிகளில் இது, உயர்நிலைப்பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துகிறது. உலகத் தாய்மொழி தினத்தின் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த கூடுதல் தகவல்களை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.
விழாவின் ஒரு பகுதியாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகத் தமிழ் சார்ந்த புதிர்கள் அடங்கிய ‘அமேசிங் ரேஸ்’ (Amazing Race) போட்டி இடம்பெற்றது.
அதில் மொத்தம் 18 குழுக்கள் பங்கேற்றன.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு குழுவிலும் கிட்டத்தட்ட நான்கு மாணவர்கள் கலந்துகொண்டு, தமிழ்ப் பழமொழிகள், திருக்குறள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் பண்பாடு சார்ந்த இடங்கள் குறித்த புதிர்களுக்குத் தீர்வு காண்பதில் போட்டியிட்டனர்.
‘வேகம் விவேகம்’ என்ற தலைப்பிற்கு ஏற்ப, மாணவர்கள் விரைவாகவும் அதேசமயம் அறிவுபூர்வமாகவும் செயல்பட வேண்டியிருந்தது.
பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழ் மொழியின் முக்கியத்துவம்: ஊடகவியலாளர்களின் அனுபவம்
பின்னர், மாலை 6 மணிக்குக் கலந்துரையாடல் அமர்வு ஒன்று நடைபெற்றது. இதில் ஆங்கில, தமிழ்ச் செய்தியாளரும் செய்தி வாசிப்பாளருமான இலக்கியா செல்வராஜி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சரவணன் அய்யாவு ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஊடகப் பணித்துறையில் தமிழ் மொழி எவ்வாறு தமக்குப் பக்கபலமாக இருந்தது என்பதைத் திருவாட்டி இலக்கியா விவரித்தார். தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும் பற்றி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
விமானி சரவணன் அய்யாவு முதன்முதலில் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தபோது, தமிழ் ஒலிக்காத ஓரிடத்தில் அது மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய உணர்வை ஏற்படுத்தியது என்பதை விளக்கினார்.
இந்த அமர்வில் மாணவர்கள் தாங்கள் தமிழ் மொழியை ஏன் அடையாளமாகக் கருத வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு ஆழமான கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் தமது உரையில், தாய்மொழி தினத்தின் வரலாற்றுப் பின்னணியையும், 1952ஆம் ஆண்டில் முன்பு கிழக்குப் பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பங்ளாதேஷில் உருது மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட வங்காள மொழிக்கான போராட்டத்தையும் நினைவுகூர்ந்தார்.
“மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமன்று, அது ஓர் இனத்தின் அடையாளம் மற்றும் கலாசாரத்தின் அடிப்படை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

