தெம்பனிஸ் வட்டாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 9) தொழில்துறைக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டது.
அதைத் தொடர்ந்து அக்கட்டடத்தின் கட்டமைப்பு பாதுகாப்பாக இருப்பதாக கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், 18 தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள அந்த மூன்று தளக் கட்டடத்தை முழுமையாக மூடுமாறு அதன் உரிமையாளருக்கு உத்தரவாணை பிறப்பிக்கப்போவதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் சனிக்கிழமை (மே 10) பின்னிரவு ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. அக்கட்டடத்தின் காவலர் நிலையம், கூரையிடப்பட்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவை உத்தரவாணைக்கு உட்படுத்தப்படமாட்டா.
சனிக்கிழமை காலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தீயணைக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் பணிகளை முடித்த பிறகு சோதனை நடத்தத் தங்கள் பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் குறிப்பிட்டது.
தீ மூண்ட கட்டடத்தின் கட்டமைப்பு நிலையாக இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முன்னதாகத் தெரிவித்திருந்தது. எனினும், தீயினால் சேதம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தாலும் கட்டமைப்புக்கு மோசமான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் குறிப்பிட்டது.
கட்டடத்தில் இருந்த ஆடை ஆபரணப் பொருள்களுக்கும் தீக்கும் தொடர்பிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.