பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் பணிக்குழு

1 mins read
78cff9cf-1ea3-48c6-a96a-b82a7396d042
பணிக்குழு அதன் மறுஆய்வை 2025ஆம் ஆண்டுத் தொடக்கத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலுள்ள பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் பணிக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துணை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு முரளி பிள்ளை அந்தப் பணிகுழுவிற்குத் தலைமை தாங்குவார்.

அண்மையில் பொதுப் பேருந்துகள் தொடர்பான விபத்துகள் அதிகரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜூன் 27ஆம் தேதி, இந்தியாவைச் சேர்ந்த 33 வயதுக் கட்டுமான ஊழியர் ஆன்சன் ரோட்டில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பேருந்து மோதியதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

புதிய பணிக்குழுவில், அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகளோடு தேசியப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், சிங்கப்பூரின் பொதுப் பேருந்து நிறுவனங்கள் நான்கு, சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருப்பர் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஜூலை 1ஆம் தேதி தெரிவித்தார்.

பணிக்குழு அதன் மறுஆய்வை அடுத்த ஆண்டுத் (2025) தொடக்கத்திற்குள் நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி பஸ்சஸ், கோ-அகெட் சிங்கப்பூர், டவர் டிரான்சிட் சிங்கப்பூர் ஆகிய நான்கு நிறுவனங்களும் மொத்தம் 5,800 பொதுப் பேருந்துகளைச் சிங்கப்பூரில் இயக்குகின்றன.

பணிக்குழுவின் மறுஆய்வு, பேருந்துச் சேவைத் துறையில் கூடுதல் மேம்பாட்டுக்கான வழிகளை அடையாளம் காண்பதுடன் பாதுகாப்புத் திட்டங்களையும் நடைமுறைகளையும் காலப்போக்கில் அமலுக்குக் கொண்டுவரும் என்றார் அமைச்சர். தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்