தோற்பாவைக் கலையால் உயிர்பெற்ற பனிக்கரடி உள்பட வன உயிரினம் சார்ந்த பல பொருள்கள் சிங்கப்பூருக்குள் 2024ல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவ்வகையில், பதப்படுத்தப்பட்ட காட்டு துருவக் கரடியின் மாதிரியைக் கிரீன்லாந்திலிருந்து இறக்குமதி செய்வதற்கு சிங்கப்பூர் 2024ல் ஒப்புதல் அளித்ததாகத் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் அறிந்துள்ளது.
இறந்துபோன விலங்கு, பறவைகளின் உடலைப் பதப்படுத்தி அதன் தோல்களில் பஞ்சை அடைத்து அவற்றை உயிருள்ள விலங்குபோலக் காட்சியளிக்க செய்யும் முறை ஆங்கிலத்தில் ‘டாக்சிடெர்மி’ என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு தோற்பாவைக் கலைமூலம் பதப்படுத்தப்பட்ட பனிக்கரடியை தனிப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்ய இரு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது என்றும், இது அந்த ஆண்டில் சிங்கப்பூர் இறக்குமதி செய்த அபூர்வ வன உயிரினப் பொருள்களில் ஒன்றும் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
அழிந்து வரும் உயிரினங்களுக்கான அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தின் (சிஐடிஇஎஸ்) தரவுகளின்படி, கடைசியாக 2012ல் தனிப்பட்ட காரணங்களுக்காகக் காட்டுப் பனிக் கரடி சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் அறியப்படுகிறது.
அவ்வகையில் 2024ஆம் ஆண்டில் தனிப்பட்ட காரணங்களுக்காகச் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பிற அரிய உயிரன, தாவரப் பொருள்களின் பட்டியலில் கள்ளிச் செடிகள், அவற்றின் விதைகள், அழிந்து வரும் இறக்கைத்தலை சுறாவின் எலும்புகள், முன்பு அருகிவரும் இனமாகக் கருதப்பட்ட ‘விக்யூனியா‘ எனப்படும் சிறிய ரக ஒட்டகத் தோலில் செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவை அடங்கும்.
சுறா எலும்புகள் அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ‘விக்யூனியா‘ விலங்கின் கம்பளி, நவீன ஆடை அலங்கார உலகில் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், ஆடையுலகில் இந்த உடைகள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்பதும் நினைவுகூரத்தக்கது.

