சிறப்புத் தேவையுடைய பிள்ளையின் தலையைப் பேனாவால் தாக்கிய ஆசிரியர்

சிறப்புத் தேவையுடைய பிள்ளையின் தலையைப் பேனாவால் தாக்கிய ஆசிரியர்

2 mins read
6653f0d5-d0dc-4476-b320-5197afc334f7
குற்றவாளிக்கு வரும் ஜூன் மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் சிறப்புத் தேவையுடைய சிறாருக்கு ஆரம்பகாலத்திலேயே கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், சிறப்புத் தேவையுடைய ஆறு வயது ஆண் பிள்ளை ஒருவரின் தலையில் பலமுறை பேனாவால் குத்தியிருக்கிறார்.

அச்செயலுக்குப் பின்னால் காரணம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆசிரியரின் செயலால் அப்பிள்ளைக்குக் காயங்கள் ஏற்பட்டன.

அந்தச் சிறுவன், விளையாட்டுப் பொருள்களால் தன்னைத்தானே அடித்துக்கொண்டதால் காயமடைந்ததாக அந்த ஆசிரியர், பெற்றோரிடமும் குழந்தைப் பராமரிப்புப் நிலையத்தின் தலைமையாசிரியரிடமும் பொய் சொன்னார்.

சிறுவனின் தாய் பலமுறை கேட்டுக்கொண்ட பிறகு, நிலையத்தின் தலைமையாசிரியர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகளைப் பார்த்தார். அதன் மூலம், ஆசிரியர் புரிந்த குற்றம் தெரியவந்தது.

குற்றவாளியான 45 வயது ஆசிரியர், சிறுவனைத் துன்புறுத்திய குற்றத்தை முன்னதாக ஒப்புக்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் குற்றவாளியின் அடையாளத்தை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர் இப்போது அந்த குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்யவில்லை. சம்பந்தப்பட்ட குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் பெயரை வெளியிடவும் அனுமதி இல்லை.

பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு மூளைச் செயல்பாட்டுக் குறைபாடும் ‘ஏடிஎச்டி’ எனப்படும் கவனக் குறைபாடும் உள்ளன. அச்சம்பவம் நிகழ்ந்தபோது ஒருநேரத்தில் ஒரு வார்த்தையை மட்டுமே பேசக்கூடிய நிலையில் அவர் இருந்தார்.

சம்பவம் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

குற்றவாளியான ஆசிரியர், சுமார் 10 ஆண்டுகளாகப் பாலர் கல்வி ஆசிரியராக இருந்தார் என்று அரசாங்க வழக்கறிஞர் எமிலி கோ தெரிவித்தார். ஆசிரியர், பாதிக்கப்பட்ட சிறுவனின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

சம்பவம், 2022ஆம் அண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்