பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக் காலம் 16 மாதங்களிலிருந்து ஓர் ஆண்டிற்கு குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
கல்வியாளர்களுக்கு மேலும் வலுவான ஆதரவை வழங்கவும் பல்துறை திறன்களைக் கொண்ட ஆசிரியர்களைக் கல்வித்துறைக்கு ஈர்க்கவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாடு, எக்செல் ஃபெஸ்ட் 2025 (Teachers’ Conference and ExCEL Fest 2025) நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு லீ, கல்வி அமைச்சும் தேசியக் கல்விக்கழகமும் இணைந்து கல்வித்துறையில் பட்டக்கல்விக்குப் பிந்தைய பட்டயப் படிப்பை (Postgraduate Diploma in Education) மேம்படுத்தி, ஆசிரியர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப அதை அமைக்க உள்ளதாகக் கூறினார்.
இந்தப் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில், கல்விக் கோட்பாடும் வகுப்பறை நடைமுறைகளும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
“அனைத்துக் கல்வியாளர்களும் ஆசிரியர் பணியின் முக்கிய அங்கங்களை அடிப்படையாகக் கற்றுக்கொள்வதோடு தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் ஏற்ப விருப்பப் பாடத்தொகுதிகளையும் தேர்ந்தெடுக்கக்கூடிய வகையில் திட்டம் மறுசீரமைக்கப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.
பயிற்சிக்காலத்திலும் பணி தொடங்கிய பிந்தைய ஆண்டுகளிலும் புதிய ஆசிரியர்கள் தங்களது வளர்ச்சிப் பயணத்தைத் திட்டமிடும் வழியில் அதிக சுய அதிகாரத்துடன் செயல்பட முடியும் என்றார் அவர்.
தற்போது திட்டத்திற்கான மதிப்பாய்வு நடைபெற்று வருவதாகவும் அது நிறைவடைந்த பின்னர் மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் திரு லீ தெரிவித்தார்.
“கல்வியில் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஆசிரியர்களின் அறிவையும் அனுபவத்தையும் மாணவர்களுக்காக உண்மையான அக்கறையோடு செயல்படும் மனப்பான்மையையும் அவற்றால் என்றும் நகலெடுக்க முடியாது,” என்று அமைச்சர் லீ வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கல்வி அமைச்சு மூன்று முக்கிய அம்சங்களில் ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும். முதன்மையாக, அவர்களின் தொழில்முறை திறன்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல். இரண்டாவது, பல்துறைத் திறன்களையும் அனுபவங்களையும் கொண்டவர்களை இத்துறைக்கு ஈர்த்தல். மூன்றாவது, பள்ளிகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் பங்காளித்துவத்தை உருவாக்குதல்.
ஆசிரியர்கள் தங்கள் பாட அறிவையும் கற்பித்தல் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள ஆசிரியர் பணி இணைப்புத் திட்டம் (Teacher Work Attachment Plus programme) போன்ற திட்டங்களில் பங்குபெற மேலும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
2022ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் இதுவரை 3,800க்கும் மேற்பட்ட கற்றல் பயணங்களும் 700க்கும் மேற்பட்ட பணி இணைப்புகளும் நடைபெற்றுள்ளன.
நிர்வாகச் சுமையைக் குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சு புதிய முன்மாதிரித் திட்டங்களையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
மாணவர் முகாம்களை ஒழுங்கமைப்பதை எளிதாக்குவதற்கான கொள்முதல் அணுகுமுறைகள், பெற்றோர் நுழைவாயில் (Parents’ Gateway) செயலியின் மூலம் மாணவர்களின் வருகையைத் தானியங்கிய முறையில் பதிவுசெய்யும் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல தீர்வுகள் ஆண்டிறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்மறையான பண்புநலன்களைக் கொண்ட அனுபவம் வாய்ந்தவர்களும் இடைக்காலப் பணியாளர்களும் கல்வித்துறையில் சேர்வதன்மூலம் மாணவர்களின் கற்றலை வளப்படுத்த முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“இத்தகைய பரிமாற்றங்கள் நமது ஆசிரியர் சமூகத்தை வலுப்படுத்துவதோடு, மாணவர்களின் வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் வழிவகுக்கும்,” என்றார் அவர்.
எதிர்காலச் சவால்களுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசிய திரு லீ, பாதுகாப்பும் அமைதியும் நிச்சயமில்லாத இன்றைய உலகச் சூழலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டினார்.
இந்நிலையில் மாணவர்கள் வாசிப்பு, எண்ணியல், பாட அறிவு போன்றவற்றை மட்டுமல்லாமல், விமர்சன ரீதியான சிந்தனை, படைப்பாற்றல், பல்வேறு கலாசாரங்களுடன் ஒத்துழைக்கும் திறன், உண்மையான உலகச் சவால்களுக்குத் தீர்வுகாணும் திறன் போன்றவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“முக்கியமாக, நிச்சயமற்ற தருணங்களில் நன்னெறிக் கொள்கைகளே அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்தப் பண்புநலன்களை வளர்ப்பதில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்கு பெரிது,” என்று அமைச்சர் லீ கூறினார்.