மூன்று குழந்தைகளைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் பாலர் பள்ளி ஆசிரியருக்கு எல்லா பாலர் பள்ளிகளிலும் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை. சிறார், இளையர் சட்டத்தின்கீழ் அந்த 36 வயது ஆசிரியர் மீது வியாழக்கிழமை (நவம்பர் 20) மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி அந்த ஆசிரியர், 12 மாத குழந்தைக்குப் பலவந்தமாக உணவூட்டியதாக நம்பப்படுகிறது. அதனால் அக்குழந்தை வாந்தி எடுக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர், குழந்தையின் முகத்திலும் முதுகிலும் அடித்ததாகவும் நம்பப்படுகிறது.
அதற்கு இரு நாள்கள் கழித்து அதே ஆசிரியர், எட்டு மாதக் குழந்தையின் வாயில் ‘பிப்’ துணியை திணித்ததாகவும் குழந்தையின் முகத்தின் மேல் போர்வையைப் போட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அதே நாளில் அவர் மற்றுமொரு 10 மாதக் குழந்தையைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர், அக்குழந்தையின் வலது கையில் அடித்ததோடு குழந்தை அமர்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி அதை முட்டி உயரத்திலிருந்து கீழே போட்டதாகவும் சொல்லப்படுகிறது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இச்சம்பவங்கள் குறித்துத் தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) அறிக்கையில் தெரிவித்தது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிகளை ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி அந்த ஆசிரியரை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பணிநீக்கம் செய்தது.
அந்தப் பாலர் பள்ளி காவல்துறையிடம் புகாரும் கொடுத்தது. பாலர் பருவ மேம்பாட்டு நிலைய விதிமுறைகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி மீதும் ஆசிரியர் மீதும் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட பாலர் பள்ளியின் முதல்வர், வேறிரு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் இவ்வேளையில், விதிமீறல் குறித்த மேல்விவரங்களைத் தற்போதைக்கு வழங்க முடியாது என்றும் அவ்வமைப்பு சொன்னது.

