சீனாவின் ஸி’அன் நகரிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாற்றால் மீண்டும் அந்நகருக்கே திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சிலர், விமானம் புறப்பட்டபோது தீப்பொறிகளைக் கண்டதாகக் கூறினர்.
‘டிஆர்135’ விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடிக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூட் நிறுவனம் கூறியது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸி’அன் ஸியன்யாங் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரகாலச் சேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அது குறிப்பிட்டது.
ஸி’அன் நகரிலிருந்து அதிகாலை 1.33 மணிக்குப் புறப்பட்ட விமானம் 1.56 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பிறகு, பயணிகளும் விமான ஊழியர்களும் வழக்கமாக வெளியேறுவதுபோல் அதிலிருந்து வெளியேறியதாகவும் ஸ்கூட் நிறுவனம் கூறியது.
பொறியாளர்கள் கோளாற்றைச் சரிசெய்யக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறியதையடுத்து அந்த விமானத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள் இங் ஸின்யுவும் அவரது நண்பர் நைஜல் சியாவும் அந்த விமானத்தில் பயணம் செய்தோரில் அடங்குவர்.
விமான மேற்கூரையில் சிவப்பு வண்ணத்தில் ஏதோ மின்னுவதைக் கண்டபோது நிலைமை சரியில்லை என்று உணர்ந்ததாகக் கூறிய 28 வயது திருவாட்டி இங், பயணிகள் விமானச் சிப்பந்தியிடம் அதுகுறித்துக் கூறிய சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்புவதாக விமானி அறிவித்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர்க் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் ஆறுதல் கூறித் தேற்றிக்கொண்டிருந்தனர். அதுதவிர விமானத்தில் பேரமைதி நிலவியது,” என்றார் அவர்.
தரையிறங்கியதும் சிறிது நேரத்திற்கு எரிபொருளின் கடுமையான வாடை வீசியதாகத் திருவாட்டி இங் நினைவுகூர்ந்தார்.
பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறி, அதிகாலை 5 மணிக்கு ஹோட்டல் சென்றடைந்த நடைமுறையை ஊழியர்கள் சுமுகமாக ஒருங்கிணைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர், பிப்ரவரி 24ஆம் தேதி, ஸி’அன் நகரிலிருந்து வேறொரு விமானத்தில் அந்தப் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்குப் பயணிகளிடம் அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கிய முன்னுரிமை தருவதாக அது கூறியது.

