சிங்கப்பூரில் திறன் பயிற்சி, திறனாளர் மேம்பாட்டுக்காக $150 மில்லியன் நிதியை ஒதுக்கவிருப்பதாகத் தெமாசெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில் நான்கு விழுக்காட்டுத் தொகையான ஆறு மில்லியன் வெள்ளியை அடுத்த சுமார் 25 ஆண்டுகளுக்கு வருடாந்தரத் தொகையாக வழங்க அது திட்டமிட்டுள்ளது.
அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக் அதன் 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், ‘டி-ஸ்பிரிங்’ எனும் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மாறிவரும் சந்தையின் தேவைகளுக்கு வர்த்தகங்கள் ஈடுகொடுக்கும் வண்ணம் ஊழியரணியை உருவாக்குவது இதன் நோக்கம்.
முதற்கட்டமாக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தோர் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டக் கல்வி பயில்வதற்கு உதவும் கல்வி உபகாரச் சம்பளங்களை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தொழில்நுட்ப மேம்பாட்டால் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ள ஊழியர்கள் வேறு வேலைகளுக்கான புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் இது கைகொடுக்கும்.
மூத்தோர், உடற்குறையுள்ளோர், சிறப்புத் தேவையுடையோரின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கும் இந்த நிதி உதவும்.
குறைந்த வருமானப் பின்னணியைக் கொண்டோர் ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் பயில்வதற்கான கல்வி உபகாரச் சம்பளங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று தெமாசெக் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
2025/2026ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்கள் இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்தை முதலில் பெறுவர்.
ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற வருடாந்தர சமூக தினத்தில் இதுகுறித்துத் தெமாசெக் நிறுவனம் அறிவித்தது.
தெமாசெக் நிறுவன ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர், தொண்டூழிய அடிப்படையில் மூத்தோரின் வீடுகளுக்கு மெருகூட்டவும் கிளமெண்டியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வாடகை வீடுகள் அடங்கிய புளோக்கின் கீழ்த்தளத்தில் சுவரோவியங்கள் வரையவும் முன்வந்தனர்.
சிங்கப்பூரில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆய்வு மேம்பாட்டுக் கல்வித் திட்டத்தையும் தெமாசெக் தொடங்கவிருக்கிறது. இங்குள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மைத் தீர்வுகளில் உதவுவதற்கு உலகெங்குமிருந்து துறைசார்ந்த வல்லுநர்களை ஈர்ப்பது இதன் நோக்கம்.
தெமாசெக் நிறுவனம் 2003ஆம் ஆண்டிலிருந்தே அதன் நிகர லாபத்தில் ஒரு பகுதியைச் சமூகப் பரிசுத் திட்டங்களுக்கு ஒதுக்கிவருகிறது. மக்களைப் பிணைத்தல், சமூகங்களை மேம்படுத்துதல், பூமியைப் பாதுகாத்தல், திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்கள்.
2014ஆம் ஆண்டு நிறுவனம் அதன் 40ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில், தெமாசெக் நெருக்கடிநேரத் தயார்நிலைக்கான நிதியாக $40 மில்லியனை அது ஒதுக்கியது நினைவுகூரத்தக்கது.