தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்குத் தற்காலிகத் தடை

தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்குத் தற்காலிகத் தடை

படம்: ஐஸ் கிரீம் சண்டேஸ், ஃபேஸ்புக்

02 Nov 2026 - 8:21 pm

2 mins read

கெப்பல் ரோட்டில் அமைந்துள்ள தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து இரைச்சல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, அந்த வளாகத்தை நிர்வகிக்கும் மேப்பிள்ட்ரீ நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிறுவனம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் அதுபற்றித் தெரிவித்தது.

அக்கம்பக்கத்தினருக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உரிமையாளர்களிடமும் வாடகைதாரர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

“எங்கள் நேரடித் திறந்தவெளி நிகழ்ச்சிகள்மூலம் மக்களை ஒன்றிணைப்பதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், உரத்த இசை சில நேரங்களில் எங்கள் அண்டை வீட்டாருக்கும் சுற்றியுள்ள சமூகத்திற்கும் சில அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று நிர்வாகம் குறிப்பிட்டது.

எண் 37 மற்றும் 39, கெப்பல் ரோட்டில் அமைந்துள்ள தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் மேப்பிள்ட்ரீ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஐந்து தளங்களைக் கொண்ட இரண்டு கிடங்குகள் இருக்கின்றன. இந்தத் தொழிற்பேட்டை வளாகத்தில் சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகமும் பல தனியார் கலைக்கூடங்களும் உள்ளன.

அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில், டிஸ்ட்ரிபார்க்கின் வடக்கே ஸ்போட்டிஸ்வுட் பார்க்கிலும் எவர்ட்டன் பார்க்கிலும் உள்ள பொது மற்றும் தனியார் வீட்டு வளாகங்களும் அடங்கும்.

சுற்றுப்புறக் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இசை நடன நிகழ்ச்சிகளை நடத்திவந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான ‘ஐஸ் கிரீம் சண்டேஸ்’ எனும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், இனி வழக்கமான முறையில் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த அவர்கள் மாற்று இடங்களைத் தேடிவருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். மேலும், எதிர்காலத்தில் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்புக் கிட்டும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள், இதில் புகார்கள் அல்லது அமலாக்க நடவடிக்கைகள் உள்ளனவா என்பது குறித்த விளக்கத்திற்குக் காவல்துறையையும் தேசியச் சுற்றுப்புற அமைப்பையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தொடர்பு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்