முறையான அனுமதியின்றி வீட்டு முகவரிகளை மாற்றியதாக 10 ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் மின்சேவையின் மூலம் வீட்டு முகவரிகளை அவர்கள் மாற்ற முயன்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
அதுகுறித்து முதன்முதலில் இவ்வாண்டு (2025) ஜனவரி மாதம் 11ஆம் தேதி, ஆணையம் தகவல் வெளியிட்டது. பதிவுசெய்யப்பட்ட வீட்டு முகவரிகளை அனுமதியின்றி மாற்ற 80 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அது சொன்னது. இணையச் சேவையில் உள்ள ‘அதர்ஸ்’ எனும் தெரிவின்மூலம் முகவரியை மாற்ற வழி இருந்ததாகக் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 10 ஆடவரும் 17க்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களையும் சேர்த்து அத்தகைய குற்றச்செயலின் தொடர்பில் 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
“புதிய முகவரிகளுக்கு அனுப்பப்படும் ஆணையத்தின் மறை எண்களைக் குற்றக் கும்பலொன்று இடைமறித்ததாகக் காவல்துறையும் ஆணையமும் மேற்கொண்ட புலனாய்வுகள் காட்டுகின்றன. பின்னர் பாதிக்கப்பட்டோரின் முகவரிகளை மாற்ற அவை பயன்படுத்தப்பட்டன,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சிங்பாஸ் கடவுச்சொல்லைப் பெறுவதற்காகக் குற்றக் கும்பல் அதனைச் செய்ததாகவும் பாதிக்கப்பட்டோரின் சிங்பாஸ் கணக்குகளைக் கட்டுக்குள் கொண்டுவர அது உதவியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர்கள் கூறினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேரில் மூவருக்கு முக்கியப் பங்கிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாய்ச் செயல்பட்டதாய்ச் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முக்கியப் பங்கு வகித்தோரில் ஒருவரான 25 வயது லீ மிங் ஷென்மீது செவ்வாய்க்கிழமை எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கணினியைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பிலான சட்டத்தின்கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். அவரோடு மேலும் 9 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏற்கெனவே நால்வர் மீது ஜனவரி மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது.
முதல்முறை குற்றம் புரிவோருக்கு மூவாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது S$10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

