‘இஆர்பி 2’ முறையை முன்னிட்டு சோதனைகள்

‘இஆர்பி 2’ முறையை முன்னிட்டு சோதனைகள்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Jun 2026 - 7:46 pm

2 mins read

மின்னியல் சாலைக் கட்டண முறையின் (இஆர்பி) இரண்டாம் கட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் வேளையில் அதற்கான சோதனைகள் நடந்துவருகின்றன.

எடுத்துக்காட்டாக, பிடோக் நார்த் ரோட்டுக்கும் மேற்குப் பகுதியை நோக்கிய தீவு விரைவுச்சாலைக்கும் இடையிலான இணைப்புச் சாலையில் வார நாள்கள் காலையில் ‘எதிரே இஆர்பி’ (ERP Ahead) என்ற குறிப்பு வாகனத்தில் இருக்கும் ‘ஒபியு’ இயந்திரத்தின் திரையில் காண்பிக்கப்படும். சாலையில் சிறிது தூரத்தில் ஒரு வெள்ளி இஆர்பி கட்டணம் கழிக்கப்படும் என்பதை இயந்திரம் காட்டும்.

அதற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு யூனோஸ் லிங்க் நுழைவாயிலுக்கு முன்பு அந்தக் கட்டணம் கழிக்கப்பட்டுவிட்டதாக ‘ஒபியு’ காட்டும்.

இதுபோன்ற ‘ஒபியு’ தகவல் தெரிவிப்பு முறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கலாம். சாவடிகளில் கழிக்கப்பட்ட இஆர்பி கட்டணம் இஆர்பி 2 முறையின்கீழ் துணைக்கோளின் மூலம் கழிக்கப்படும். அதன்படி துணைக்கோள் வாகனம் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு கட்டணம் கழிக்கப்படும்.

நிறைவுக்கட்டத்தை நெருங்கும் பழைய கட்டண முறை

1998ஆம் ஆண்டிலிருந்து சாவடிகள் மூலம் இஆர்பி கட்டணங்கள் கழிக்கப்பட்டுவருகின்றன. அந்த முறை இப்போது நிறைவுக் கட்டத்தைத் தொடவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நவீன தொழில்நுட்ப அம்சத்துடன் இஆர்பி கட்டண முறை செயல்பாட்டுக்கு வரும்.

முடிவெடுக்கப் போதுமான நேரம்

இஆர்பி கட்டணம் கழிக்கப்படுவதற்கு முன்பு சாலையில் கடைசியாக வரும் நுழைவாயிலில்தான் ஓட்டுநர்களுக்கு ‘எதிரே இஆர்பி’ எனும் குறிப்பு ‘ஒபியு’வில் காண்பிக்கப்படும். இதன் மூலம் இஆர்பி கட்டணத்தைத் தவிர்க்க விரும்பும் ஓட்டுநர்களுக்கு மாற்று வழியில் செல்வது குறித்து முடிவெடுக்கப் போதுமான நேரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை மக்கள் பயன்படுத்திப் பார்க்க வகைசெய்யும் சோதனை தற்போது நடந்துவருகிறது. சோதனைக் கட்டத்தில், தற்போது செயல்பாட்டில் இருக்கும் சாவடிகளுக்கு அருகே இஆர்பி கட்டணங்கள் கழிக்கப்படுகின்றன. அவ்விடங்களில்தான் துணைக்கோள் சமிக்ஞை மிகவும் வலுவாக இருந்துவருகிறது.

விரைவுச்சாலைகளில் ‘எதிரே இஆர்பி’ குறிப்பு பொதுவாக கட்டணம் கழிக்கப்படும் இடத்துக்கு சுமார் 200 மீட்டர் முன்னரும் இணைப்புச் சாலைகளில் (arterial roads) கிட்டத்தட்ட 60 மீட்டருக்கு முன்னரும் காண்பிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சாலைஇஆர்பிகட்டணம்