தைப்பூசம் 2026: பக்தர்களின் மகிழ்ச்சியும் மனநிறைவும்

தைப்பூசம் 2026: பக்தர்களின் மகிழ்ச்சியும் மனநிறைவும்

3 mins read
16896870-e6d7-4f96-ab48-f8eb7e938c70
நடனமாடியபடி கோவிலை வந்தடையும் காவடிகள். - படம்: சுந்தர நடராஜ்

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் வழிபாட்டை மையமாகக் கொண்ட தைப்பூசத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

தைப்பூசத் திருநாளான ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 1) ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளையும் பால்குடங்களையும் சுமந்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை (ஜனவரி 31) இரவு பால்குடங்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி வரிசையாகப் புறப்பட்டன.

அதிகாலையிலிருந்து காவடிகள் புறப்பட்டு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை நோக்கிப் படையெடுத்தன.

காலை 10 மணியளவில், மூத்தோர் மற்றும் சக்கர நாற்காலியில் உள்ளோர்க்காகவும் தனியாக அமைக்கப்பட்ட நுழைவாயில் வழியே ஓர் வரிசையும், தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்குத் தனிவரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், காவடியேந்தி வந்து முருகப்பெருமான்முன் நடனமாடுமிடம் சற்றே வசதியாக அமைந்தது.

பால்குடங்களும் காவடிகளும் இரு வரிசையில் வந்தாலும், சன்னிதியில் இருதரப்பினரையும் பிரிக்க கயிறு கட்டப்பட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும் எனச் சில பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

காலை 11.30 மணிக்குதான் அன்னதானம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டாலும், 10.50 மணிமுதல் அங்கு கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நீண்ட நேரமாகக் காத்திருக்கும் சோர்வை பக்தர்களிடம் காணமுடிந்தது.

காவடியேந்தி நேர்த்திக்கடனை முடித்த மகிழ்ச்சி

அதிகாலையிலும் காலையிலும் பதிவுசெய்திருந்த பக்தர்கள் காலை 10 மணியளவில் முருகனை வழிபட்டுவிட்டு இளைப்பாறத் தொடங்கியிருந்தனர்.

முதன்முறையாகக் காவடியேந்திய தம் தம்பி விக்னேஸ்வரன் நல்லபடியாக முடித்துவிட்ட பூரிப்பில் திளைத்திருந்தார் ராஜேஸ்வரி, 28. “காவடி எடுக்கப் போகிறேன் என அவன் சொன்னதும் நம்ப முடியவில்லை. ஆனாலும், ஏதேனும் நல்ல நோக்கத்தை மனத்தில் நிறுத்தி வேண்டியிருப்பான் என்பதால் முழு ஆதரவுடன் துணையாக வந்தேன். நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.

தம்பி விக்னேஸ்வரன் காவடியெடுத்து முடித்ததில் பெருமிதம் கொண்டார் அக்கா ராஜேஸ்வரி.
தம்பி விக்னேஸ்வரன் காவடியெடுத்து முடித்ததில் பெருமிதம் கொண்டார் அக்கா ராஜேஸ்வரி. - படம்: சுந்தர நடராஜ்

“எங்கள் தாத்தா, பெரியப்பா, சித்தப்பா அனைவரும் காவடி எடுப்பர். சிறுவயதிலிருந்தே அவர்களைப் பார்த்து எனக்கும் எடுக்க ஆசை. அது நிறைவேறியதில் மகிழ்ச்சி,” என்றார் தேசிய சேவையாற்றும் விக்னேஸ்வரன், 24.

“என் தாயார் நான் நான்கு வயதாக இருக்கும்போது காவடி எடுக்கச் சொன்னார். அப்போது இனம்புரியாத உணர்வோடு எடுக்கத் தொடங்கினேன். இப்போது முருகனைக் காணும் மகிழ்ச்சியுடன் எடுக்கிறேன்,” என்றார் ஹவ்காங் குடியிருப்பாளர் முரளிதரன், 43.

“எப்போதும் இது வேண்டும் என வேண்டி எடுப்பதில்லை. முருகன் எனக்கு அளித்துள்ள நல்ல வாழ்வுக்கு நன்றி சொல்கிறேன். இது ஒரு திருவிழா. இதுவே எங்களுக்குப் புத்தாண்டு,” என்று புன்னகையுடன் சொன்னார் அவர்.

முரளிதரன் ஹரிகண்டம் காவடி சுமக்க, அவரது மகன்கள் இருவரும் பால் காவடி, சிலாவுக் காவடி ஏந்தினர். அவர்களையும் நான்கு வயதில் பால்குடம் எடுக்கப் பழகியதாகக் கூறிய அவர், தம் உறவினர் மகன்கள் இருவரும் சேர்த்து குடும்பத்திலுள்ள ஐந்து பேர் காவடி எடுத்ததைப் பெருமையுடன் சுட்டினார். அத்துடன், பால்குடம் எடுக்கும் வீட்டுப் பெண்கள், அதற்கு ஆதரவாகவும் துணையாகவும் வந்தோர் எனக் கூடி மகிழ்வது தனி அனுபவம் என்றும் சொன்னார் முரளி.

தைப்பூசத் திருவிழாவைப் புத்தாண்டுபோலக் கொண்டாடும் முரளிதரன் குடும்பத்தினர்.
தைப்பூசத் திருவிழாவைப் புத்தாண்டுபோலக் கொண்டாடும் முரளிதரன் குடும்பத்தினர். - படம்: சுந்தர நடராஜ்

திருமணம் முடிந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், பிள்ளைச் செல்வம் வேண்டியிருந்தார் சுரேந்திரன் விஜயகுமார். அழகிய பெண் பிள்ளையைக் கையிலேந்தும் அருளைக் கொடுத்த முருகப் பெருமானுக்கு நன்றிசெலுத்த நான்காண்டுகளுக்குமுன் காவடி எடுத்தார் அவர்.

“முதல் காவடி அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அதன்பின் தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது இது ஒரு வழக்கமாகியுள்ளது,” என்று திரு சுரேந்திரன் கூறினார்.

பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த மகள் லட்சுமி ஜேன் சுரேந்திரனுடன் ஜோய் மகேஸ்வரி - சுரேந்திரன் இணையர்.
பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த மகள் லட்சுமி ஜேன் சுரேந்திரனுடன் ஜோய் மகேஸ்வரி - சுரேந்திரன் இணையர். - படம்: சுந்தர நடராஜ்

“ஒவ்வொருமுறையும் காவடி எடுத்து அவர் நடக்கும் பயணம் சிலிர்ப்பானதாகவே இருக்கும். முருகனைத் தரிசிப்பதே தனியின்பம்,” என்றார் அவரது மனைவி ஜோய் மகேஸ்வரி.

குறிப்புச் சொற்கள்