பால்குடம் ஏந்திய பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தைப்பூச ஊர்வலப் பாதை

பால்குடம் ஏந்திய பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தைப்பூச ஊர்வலப் பாதை

3 mins read
a567087f-c285-4b9f-9821-819da3b5de5b
தைப்பூசத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த, பால்குடங்களை ஏந்தியவாறு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலை நோக்கிச் சென்றனர்.  - படம்: த.கவி
multi-img1 of 2

பெருந்திரளான பக்தர்கள் கூட்டம், ஓயாது ஒலித்த பக்திப் பாடல்கள், எண்ணற்ற வேண்டுதல்கள் எனப் பக்தி மணம் கமழ்ந்தது தைப்பூச ஊர்வலப் பாதை.

2026ம் ஆண்டிற்கான தைப்பூசம் உற்சாகமாக தொடங்கியது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மக்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேரளவில் ஒன்றுகூடினர்.

நேரம் செல்ல செல்ல நேர்த்திக்கடன் செலுத்த வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த, பால்குடங்களை ஏந்தியவாறு அருள்மிகு தெண்டாயுதபாணி  கோவிலை நோக்கிச் சென்றனர். மேலும் அவர்கள், மனமுருக வேண்டுதல் செய்தவாறு, சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கும் இடைப்பட்ட 3.2 கிலோமீட்டர் தொலைவு ஊர்வலப் பாதையை பக்திப் பரவசத்துடன் கடந்தனர்.

பக்தர்கள் பாராட்டிய நேர மேலாண்மை

ஊர்வலப் பாதையில் நடந்து சென்றவர்களில் கணிசமான அளவு வெளிநாட்டு ஊழியர்களும் இடம்பிடித்திருந்தனர். ஊர்வலத்தை எளிதாக கடந்து செல்ல ஏதுவாக பக்தர்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதன்படி, முதல் குழுவினர் ஏறத்தாழ இரவு 11.20 மணியளவில் பால்குடம் ஏந்தியவாறு தங்கள் பயணத்தைத் தொடங்கினர். 

குடும்பத்தினரோடு இணைந்து, பக்திப் பாடல்களைக் கேட்டவாறு உற்சாகத்துடன் தங்கள் நடையைத் தொடர்ந்தனர் பக்தர்கள்.

இதற்கிடையே, அவர்களின் களைப்பைப் போக்குவதற்கு மக்களில் சிலர் தண்ணீர் போத்தல்களை வழங்கியதையும் வீதிகளில் காணமுடிந்தது.

தைப்பூச விழாவில் முதல் அணியாக நடைபோடத் தொடங்கியவர்களில் சிலர் தங்கள் கருத்துகளை தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

கிராஞ்சியிலிருந்து வருவதால் முன்கூட்டியே தம் நண்பர்களுடன் வந்துவிட்டதாகக் கூறினார் திரு பழனியப்பன் பாலமுருகன், 34.

‘‘ரயில் சேவைகள் இன்னும் சில மணிநேரங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தால், வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்ப வசதியாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

தைப்பூச ஊர்வலம் குறித்து  மகிழ்ச்சி தெரிவித்தார் பல ஆண்டுகளாகப் பால்குடம் சுமந்து வரும் திரு பரதன், 38.

“நான் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பால்குடம் எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முறையும் எதிர்பார்த்த அளவிற்கு எங்களை வழிநடத்தி, பக்தர்களை நன்றாகவே கவனித்தனர்.

‘‘தைப்பூசம் தொடர்பில் விதிக்கப்படும் கட்டுப்பாட்டை நாம் மதித்து பின்பற்றுவது முக்கியம்,’’ என்றார் திரு பரதன்.

நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காகக் குழுமியிருந்த பக்தர்களில் கணிசமானோர் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்காகச் செய்யப்பட்டுள்ள நடைமுறைகள் சிறப்பாக அமைந்துள்ளதாகக் கூறினர். 

குறிப்பாக, நேர மேலாண்மை அடிப்படையில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்படுவது பாராட்டுக்குரியது என்றனர் பக்தர்கள்.

நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான முன்பதிவு முறையைப் பொறுத்தவரை, பக்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த நேரத்தைப் பெறுவதில் சில சிரமங்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலைக் குறைக்க இது அவசியமானது என்ற கருத்தை பலர் முன்வைத்தனர். 

“குடும்பத்துடன் வருபவர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனிப்பட்ட வரிசை, அதற்கென்றே கோவில் வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனி இடவசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் பக்தர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியாக பிரார்த்தனை செய்வதற்கான உணர்வை வழங்குகின்றன,’’ என்றார் திருவாட்டி சாந்தி சுரேஷ்.

‘‘எங்களைப் போன்ற பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தாலும், குடும்பத்துடன் வந்திருப்பதைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் எங்களை முறையாக வழிநடத்தி வழிபாட்டிற்கு அனுமதித்தனர்.

‘‘பக்தர்கள் குழுக்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய வழிமுறைகள் அனைத்து பக்தர்களுக்கும் நிறைவான அனுபவத்தை அளிக்கும்,’’ என்று தாம் உறுதியாக நம்புவதாகத் திருவாட்டி சாந்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்