ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்கு முதல்நாள் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் முருகப் பெருமானின் உற்சவத் திருவுருவம் வெள்ளி ரதத்தில் சிங்கப்பூரின் நகர்ப்பகுதியை வலம்வருவது வழக்கம்.
காலையில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குமுன் சற்று நேரம் நிற்கும்.
பின்னர் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடையும்.
பூசைகளுக்குப் பிறகு மாலையில் ரத ஊர்வலம் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் தொடங்கி நகர்ப்பகுதியை வலம்வந்து தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடையும்.
132 ஆண்டுகால வரலாறு
சிங்கப்பூரில் இந்த வெள்ளி ரத ஊர்வலத்திற்கு ஒரு நீண்ட நெடிய வரலாற்று மரபு உண்டு.
ஒவ்வோர் ஆண்டும் பக்தர்கள் ஒளிசிந்தும் ரதத்தின் அழகை மட்டுமே பார்த்து ரசித்திருப்பர்.
ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் கதைகளும் அதைத் தயார்செய்ய எடுக்கப்படும் நுணுக்கமான முயற்சிகளும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிங்கப்பூரில் வெள்ளி ரத ஊர்வலத்துடன் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருநாள் 1894ல் தொடங்கியது. தைப்பூசத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த முதல் ரதம் விநாயகர் கோயிலுக்குச் சென்றது.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் பினாங்கில் இருக்கும் வெள்ளி ரதமும் சிங்கப்பூரில் இருக்கும் வெள்ளி ரதமும் ஒரே மாதிரியான ரதங்கள் என்று தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம் காசி, 69, பகிர்ந்துகொண்டார்.
“தமிழ்நாட்டின் காரைக்குடியிலிருந்து ரதம் அமைக்கப்பட்டு இங்கு எடுத்துவரப்பட்டபோது பினாங்கில் இருக்கும் துறைமுகத்தில் சிங்கப்பூருக்கு வரவேண்டிய ரதம் இறக்கப்பட்டது. அதுபோல, சிங்கப்பூருக்கு வரவேண்டிய ரதம் பினாங்கில் இறக்கப்பட்டது,” என்றார் திரு காசி.
இது தெய்வச் செயல் என்று நினைத்துக்கொண்ட இருதரப்பினரும் ரதங்களை மாற்றிக்கொள்ளவில்லை.
பலர் வெள்ளி ரதம் ஏன் விநாயகர் கோயிலுக்குச் செல்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியக் காரணமே முருகன் தம் அண்ணன் விநாயகரிடமிருந்து வேலை வாங்கிக்கொள்ள ரதம் அங்கு செல்கிறது என்று திரு காசி விளக்கினார்.
ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள்
கிட்டத்தட்ட 7 மீட்டர் உயரம் கொண்ட வெள்ளி ரதம் எந்த இடையூறுமின்றி, பாதுகாப்பாக ஊர்வலம் வர பல முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் செயலாளர் அழகப்பன் அண்ணாமலை, 47, கூறினார்.
சிங்கப்பூர் சாலைகளில் மேம்பாலங்கள், இஆர்பி அமைப்புகள் இருப்பதால் ரத ஊர்வலத்திற்கான பாதையை திட்டமிடும்போது அவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் திரு அண்ணாமலையும் தொண்டூழியர்களும் இணைந்து ஊர்வலப் பாதையில் ஏதேனும் புதிதான கட்டுமானங்கள் உள்ளனவா என்று பார்க்கின்றனர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதிக்கு விண்ணப்பம் செய்த பிறகு, ரதத்தின் எடை, உயரம் போன்ற தகவல்கள் ஆணையத்திடம் தெரிவிக்கப்படுகின்றன. பின்னர் அத்தகவல்கள் சிங்கப்பூர்க் காவல்துறையிடமும் தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வளவு உயரமான, எடைமிக்க ரதத்தை சமநிலைப்படுத்த ரதத்தின் சக்கரங்கள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார் திரு அண்ணாமலை.
மரத்தால் செய்யப்பட்ட அந்தச் சக்கரங்களின்மீது ரப்பர் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளுக்காக அந்தச் சக்கரங்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல் மூலமாக மதுரைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. பழங்காலத்தில் சிங்கப்பூரில் காளை மாடுகளால் ரதம் இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மின்வேலைப்பாடுகள்
வெள்ளி ரத ஊர்வலம் சீரும் சிறப்புமாய் நடைபெற 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவளித்து வருகிறார் தொண்டூழியர் கருப்பையா வீரப்பன், 57.
குறிப்பாக ரதத்தின் மின்வேலைப்பாடுகளில் இவர் கவனம் செலுத்துகிறார். ஊர்வலத்திற்கு இரு மாதங்களுக்கு முன்பே ரதத்திற்கு மெருகூட்டுதல், மின்வேலைப்பாடுகள் போன்ற பணிகளில் அவர் ஈடுபடுகிறார்.
வெள்ளி ரதம் மிளிர முக்கியக் காரணமாக இருப்பது ஒளி விளக்குகள். முன்னர் சாதாரண மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அவற்றின் இடங்களை ‘எல்இடி’ விளக்குகள் பிடித்துவிட்டன.
சாதாரண மின்விளக்குகளுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதால் ‘எல்இடி’ விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பல வண்ணங்களில் வருவதாலும் வெள்ளி ரதத்திற்கு அதிக பொலிவூட்டுவதாகவும் நம்பப்படுகிறது.
“ஒவ்வோர் ஆண்டும் புதிய எல்இடி விளக்குகள் வாங்குவோம். பல வகையான வண்ணங்களிலும், ஒளிர்திறன் அதிகமாக இருக்கும் விளக்குகளும் வாங்கப்படும்,” என்றார் திரு வீரப்பன்.
ரத ஊர்வலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை, ஒவ்வொரு வாரமும் அதன் ஒளிவிளக்குகள் சோதிக்கப்படுகின்றன.
ஊர்வலத்தின்போது ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதனைச் சரிசெய்ய தம்மைப்போல் இருவர் தயாராக இருப்பர் என்றும் அவர் சொன்னார்.
“மழை பெய்தால் மின்விநியோகம் துண்டிக்கப்படலாம் என்பதால் நீர்புகா ‘எல்இடி’ விளக்குகளைப் பயன்படுத்துவோம்,” என்றார் திரு வீரப்பன்.
தற்போதைக்கு ரதத்தை இழுத்துச்செல்லும் வண்டியில் மின்னாற்றலை வழங்கும் மின்னாக்கி (generator) உள்ளது. வருங்காலத்தில் மின்கலத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் திரு வீரப்பன் கூறினார்.
இளையரின் பங்கு
வாழையடி வாழையாக குடும்ப வழக்கமாக தொண்டூழியத்தைப் பின்பற்றி வருகிறார் மு. அருணாச்சலம், 29. அவரது 17 வயதில் தொடங்கிய தொண்டூழியம் இன்றுவரை எள்ளளவும் குறையவில்லை.
“வெள்ளி ரத ஊர்வலம் ஆண்டிற்கு ஒருமுறைதான் என்பதால் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். எனக்கு முன்னர் தொண்டூழியர்களாகச் சேர்ந்த பலருடன் இணைந்து ஊர்வலத்திற்கு உதவுவதில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்று சொன்னார் திரு அருணாச்சலம்.
வெள்ளி ரதத்தை மெருகூட்டும் பணிகளில் ஈடுபடும் இவர், ரதத்தின் அளவு பெரிது என்பதால் சாரக்கட்டு வைத்து மெருகூட்டும் பணிகள் நடைபெறும் என்றார்.
தொண்டூழியர்கள் பலர் தலைமுறை தலைமுறையாக உதவி வருவது கண்டு தானும் இதில் சேர விரும்பியதாக அவர் சொன்னார்.
“இளையர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பாரம்பரியம் நீடிக்கும். தோழமையுடன் ஊர்வலத்திற்கு உதவும்போது கிட்டும் மகிழ்ச்சியே தனி,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு அருணாச்சலம்.
முழுநேர மருத்துவராகப் பணியாற்றும் இவர், வார இறுதி நாள்களில் தொண்டூழியத்திற்கு நேரம் ஒதுக்குகிறார்.

