தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்வின் சிறந்த நாள்களுக்கு நன்றி

3 mins read
754b88dd-9649-467c-9406-4a15e15e9251
390 கிம் செங் ரோட்டிலுள்ள டைம்ஸ் ஹவுஸ் கட்டடத்திலிருந்து வெளியேறி தோ பாயோவில் உள்ள நியூஸ் சென்டருக்கு மாறுமுன் ஊழியர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெள்ளிக்கிழமை ஜூலை 4ஆம் தேதியுடன் எஸ்பிஎச் மீடியாவில் எனது செய்தியாளர் பயணம் முடிவுக்கு வந்தது.

நான் 44 ஆண்டுகள், 4 மாதங்களுக்கு முன்னர் செய்தியாளராக எனது பயணத்தைத் தொடங்கினேன். அதில் எனக்குக் கிடைத்த பல அரிய வாய்ப்புகளுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

செய்தித் துறை எனது இதயத்தோடு கலந்த ஒன்று. அதன் தொடர்ச்சியாகத்தான் 1981ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் இணைய எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தது.

அப்பொழுது என் எண்ணமெல்லாம் விளையாட்டுப் பிரிவில் ஓரிரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பின்னர், செய்திப் பிரிவு, குற்றச் செய்திப் பிரிவு ஆகியவற்றுக்கு படிப்படியாக மாறிச் செல்ல வேண்டும் என்பதே.

செய்தியாளராகச் செயல்பட்டது குதூகலமான காலம். வாழ்வின் பல நிலைகளில் இருந்த மக்களைச் சந்தித்து அவர்களின் வரலாற்றை எழுத்து வடிவில் பதிவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்நாள்களில் கைப்பேசி இல்லை. அவரவர்க்குக் கையில் ஒரு பேஜர். அதை வைத்துக்கொண்டு அலுவலகத்தைத் தொடர்புகொள்ள பத்துக் காசு போட்டுப் பொதுத் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். மின்தட்டச்சு இயந்திரத்தைக் கொண்டுதான் செய்தியைப் பதிய வேண்டும். வெளியூர் சென்றால் கைம்முறையாகப் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

வேலையிடம் அமைந்திருந்த டைம்ஸ் ஹவுஸ் கட்டடத்தில் வேலை செய்தபோதுதான் என் வருங்கால மனைவியும் சக செய்தியாளருமான சித்ரா ராஜாராமைச் சந்தித்தேன். சுதந்திரத்துக்குப்பின் சிங்கப்பூரின் பொது வீடமைப்பைக் கட்டியெழுப்பிய முன்னாள் அமைச்சர் லிம் கிம் சான் தலைமையில் 2002ல் எஸ்பிஎச் நிறுவனம் டைம்ஸ் ஹவுசிலிருந்து தோ பாயோ சென்டருக்கு இடமாறியது.

நான் பின்னர் செய்திப் பிரிவு, சண்டே டைம்ஸ் செய்திப் பிரிவு, லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வும் வளமும் பிரிவு என மற்ற செய்திப் பிரிவுகளுக்கும் சென்று பணியாற்றி, மறுபடியும் விளையாட்டுச் செய்திப் பிரிவுக்கே திரும்பினேன்.

என் ஆரம்ப மாதச் சம்பளம் $350. அந்நாள்களில் பணப் பட்டுவாடா ரொக்கமாக இருந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் 10 ஆண்டுகள் பணியாற்றியபின் மாற்றம் வேண்டுமென நினைத்த நான் நியூ பேப்பரில் சேர்ந்தேன்.

இங்குதான் நான் துணையாசிரியர் பொறுப்பு, செய்தியைத் திருத்தும் பொறுப்பு, செய்திப் பக்கத்தை வடிவமைத்தல் என செய்தித்தாள் தயாரிக்கும் நுணுக்கங்களைக் கற்றேன்.

நியூ பேப்பரில் பணியாற்றிய காலம் கடினமான ஒன்று. அதிகாலை 5.30 மணிக்கு வேலை தொடங்கும். நண்பகல் உணவுக்குச் செல்வோரை குறிவைத்த நியூ பேப்பர், நேரத்துடன் விற்பனைத் தளங்களுக்குச் சென்று சேர வேண்டும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள்போல் நிரந்தர சந்தாவை நம்பியிருந்த செய்தித்தாள் அல்ல நியூ பேப்பர். அது ரயில் நிலையங்கள், ஒட்டுக் கடைகளில் விற்பனையாகும் செய்தித்தாள். விற்பனை உச்சத்தில் இருந்த காலத்தில் அது 100,000 பிரதிகள் விற்பனையாயின. மழை நாள்களில் விற்பனை படுத்துவிடும்.

தினமும் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் செய்திகளும் வடிவமைப்பும் இருக்க வேண்டும். அதிலும் தினமும் எங்கள் செய்தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் வருவதைப்போல் அல்லாது புதிய கோணத்தில் வரவேண்டும். பல திறமையான செய்தியாளர்கள், ஆசிரியர்களைப் பெற்றிருந்தது எங்களுக்குப் பேருதவியாக அமைந்தது.

நியூ பேப்பரில் 14 ஆண்டுகள் பணியாற்றியபின் மீண்டும் பணியிடம் மாறும் சூழல் வந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் திரும்ப வேண்டும் என எண்ணிய நான் தமிழ் முரசுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டேன்.

தமிழ் முரசை 1995ஆம் ஆண்டு எஸ்பிஎச் வாங்கியது. ஆறு மாதங்கள் மட்டுமே தமிழ் முரசில் கால்பதிக்க வேண்டிய நான் 19 ஆண்டுகளாகத் தமிழ் முரசு, தப்லா! என நிலைபெற்றேன். அந்த 19 ஆண்டுகளும் பொன்னான காலம்.

2021ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அரசு நிதியுதவியுடன் எஸ்பிஎச் மீடியா என்ற நிறுவனம் உருவானது.

மின்னிலக்கச் செய்தி, மாற்று ஊடகம் என ஊடகத் துறை அதிரடி மாற்றம் கண்டுள்ளது. அண்மையில் மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஊடகம், காணொளிகள், வலையொளி என வழக்கமான செய்தித் துறை மக்களை ஈர்க்க போட்டாபோட்டியில் இறங்க வேண்டியதாயிற்று.

செய்தி ஊடகத் துறை நான் கால்பதித்த காலத்திலிருந்து பேரளவில் மாற்றம் அடைந்துள்ளது. அந்த மாற்றங்களுக்கு நடுவே நான் வாழ்ந்து வந்துள்ளேன். இனி இங்கிருந்து மாற வேண்டிய காலமும் வந்தாயிற்று.

குறிப்புச் சொற்கள்