தீமிதித் திருநாள் அக்டோபர் 12ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள அந்த மூன்று மாத திருவிழா, திங்கட்கிழமை ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும்.
இந்து அறக்கட்டளை வாரியம், வியாழக்கிழமை (ஜூலை 24ஆம் தேதி) வெளியிட்டுள்ள தனது செய்தியாளர் அறிக்கையில் இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.
பால்குடம், அங்கபிரதட்சணம், கும்பிடுதண்டம், பூக்குழி இறங்குதல், பூக்குழி சுற்றுதல் ஆகியவற்றில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கு இணையப் பதிவு கட்டாயம் தேவைப்படும்.
முன்பதிவுக்கான இணையத்தளம், செப்டம்பர் 4ஆம் தேதி திறக்கப்படும்.
இதன் தொடர்பில் பக்தர்கள், ஆலய அலுவலகத்தை 6223 4064 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது https://heb.org.sg/ என்ற இணையத்தளத்தையோ facebook.com/hinduendowmentsboard என்ற ஃபேஸ்புக் பக்கத்தையோ நாடலாம்.
கொடியேற்றம்
வரும் திங்கட்கிழமை மாலை வேளையில் நடைபெறும் இந்தச் சடங்கின் தொடக்கத்தில் ஆலயத்தின் தலைமை பண்டாரம், கரகத்தைச் சுமந்துகொண்டு ஆலயத்தைச் சுற்றி ஆடி வருவார்.
அதையெடுத்து வாஸ்து சாந்தி, புண்யாஹவாசனம் உள்ளிட்டவை இடம்பெறும். இரவு கிட்டத்தட்ட 9.30 மணிக்குள் ஆஞ்சநேயர் உருவம் பதித்த கொடி ஏற்றப்படும்.