தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் கைவரிசை; சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகப் பேர்வழிகள்

2 mins read
81a64804-2fba-49e2-ac83-4701d800268f
லியு ஸிடாங். - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 2

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் சக பயணியிடமிருந்து பணம், வங்கி அட்டை ஆகியவற்றைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள் வியாழக்கிழமையன்று (ஜூன் 5) சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இத்திருட்டுக் குற்றத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வாங் வெய், 40 , லியு ஸிடாங், 35, எனும் அவ்விருவரும் சீன நாட்டினர்.

லியு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தமக்கு ஏற்பட்ட காயம் காரணமாகச் சக்கர நாற்காலியில் குற்றம் நடந்த இடத்திற்கு வந்ததாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவருக்கு ஏற்பட்ட காயம் விசாரணையுடன் தொடர்புடையதன்று என அவர் குறிப்பிட்டார்.

சந்தேகப் பேர்வழிகள் இருவரும் ஜூன் 2ம் தேதி மாலை கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் $169 ரொக்கத்தையும் இரு கடனட்டைகளையும் திருடிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.

அவ்விருவரையும் சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள், இருவரும் களவாடியதாக நம்பப்படும் வங்கி அட்டைகளை வீசியெறிந்த குப்பைத் தொட்டி, சிங்கப்பூரில் அடுத்த விமானம் ஏற அவர்கள் காத்திருந்த முதல் முனையத்தின் பயணிகள் இடைநிறுத்தப் பகுதிவரை அவர்களைக் கூட்டிச் சென்றனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து அதே விமானத்தில் பயணம் செய்த காவல்துறை அதிகாரியும் அவருடைய மனைவியும் அளித்த விவரங்கள், புகைப்படங்கள், கண்காணிப்புப் படக்கருவிப் பதிவு ஆகியவற்றின் உதவியுடன் விமான நிலைய அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அவ்விருவரையும் கைது செய்தனர்.

புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவ்விருவருக்கும் ஒருவாரம் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவ்விருவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்