சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ள வாமனத் தீவு நூலில் கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று தமிழர் தலைவரும் திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி. வீரமணி தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் எழுதியுள்ள வாமனத் தீவு (சிங்கப்பூரின் வரலாற்றுத் தொகுப்பு) என்னும் நூலின் அறிமுக விழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அவ்விழாவில் தலைமையேற்றுச் சிறப்புரை ஆற்றி நூலை வெளியிட்டபோது முனைவர் கி. வீரமணி அவ்வாறு குறிப்பிட்டார்.
ஈ.வெ.கி. சம்பத் சாலையில் அமைந்துள்ள பெரியார் திடலில் இருக்கும் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல் நூலை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மேனாள் தலைவரும் கவிதா பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு சேது சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்துரை ஆற்றிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பிரிட்டிஷார் போய்விட்டனர் என்று மக்கள் மகிழ்ந்தபோது, ஜப்பானியர்களின் கொடுங்கோலாட்சி பிரிட்டிஷாரை நல்லவர்களாக்கிவிட்டது என்று குறிப்பிட்டார். ஜப்பானியர்களின் சித்திரவதைகளைப் படித்தபோது மனம் பதறுகிறது என்றார் அவர்.
நூலை அறிமுகம் செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி, தாம் மலேசியாவைச் சேர்ந்தவர் என்பதால் மலேசியா, சிங்கப்பூர் பற்றிப் பேசுவதே தனி இன்பம் என்று தெரிவித்தார். 600 பக்க நூலில் சிங்கப்பூர் பற்றி நமக்குத் தெரியாத பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரின் ‘மக்கள் மனம்’ ஆசிரியரும் கவிமாலையின் நிறுவனருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, நூலாசிரியர் திரு ஆண்டியப்பன் எதையும் சரியாகச் செய்ய வேண்டுமென்று நினைப்பவர் என்று தெரிவித்தார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் 1993ல் உறுப்பினராகி 1995ல் செயலாளர் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றி 2005ல் அதன் தலைவராகி அந்த அமைப்பை உலகப் புகழ்பெறச் செய்தவர் திரு ஆண்டியப்பன் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இயக்கத்தின் செயலாளரும் வைகை இலக்கியக் கழகத்தின் தலைவருமான திரு மு. சிதம்பரபாரதி, பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு ஆண்டியப்பன் என்றும் அவர்கள் ஆறு தலைமுறைகளாக மலாயாவிலும் பின்னர் மலேசியாவிலும் இப்போது சிங்கப்பூரிலும் வாழ்வதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்புரையுடன் நன்றியுரையும் ஆற்றிய நூலாசிரியர் திரு நா. ஆண்டியப்பன், எட்டு ஆண்டுகள் உழைத்துத் தரவுகளைத் திரட்டி, எட்டு மாதங்களில் நூலை எழுதி முடித்ததாகத் தெரிவித்தார். புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் திரு செல்வ. மீனாட்சிசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.
பன்னாட்டுத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனமும் புதுமை இலக்கியத் தென்றலும் இணைந்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

