இந்தியச் சமூகத்தைக் குறிவைத்த பதிவுகள் திட்டமிட்ட பிரசாரம் என்பதற்கு ஆதாரமில்லை

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சு விளக்கம்

இந்தியச் சமூகத்தைக் குறிவைத்த பதிவுகள் திட்டமிட்ட பிரசாரம் என்பதற்கு ஆதாரமில்லை

2 mins read
ee055883-49f1-40c0-a8da-f2386156861e
உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். - காணொளிப் படம்: நாடாளுமன்றம்

இந்தியச் சமூகத்தை இலக்கு வைத்த இணையப் பதிவுகள் திட்டமிட்ட பிரசாரம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

சிங்கப்பூர் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாகச் சித்தரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 14 இணையப் பதிவுகள், வெளிநாட்டு அரசாங்கத்தாலோ, அமைப்பாலோ திட்டமிட்டு நடத்தப்பட்ட பரப்புரை என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் தற்போது இல்லை என்று உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்துள்ளார்.

அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட், மார்சிலிங் - இயூ டி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹனி சோ, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் நியோ கோக் பெங் ஆகியோர் செவ்வாய்கிழமை (ஜூலை 7) எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

முன்னதாக உள்துறை அமைச்சு நடத்திய விசாரணையில், அந்த உள்ளடக்கங்கள் சீனாவைத் தளமாகக்கொண்ட ஒரு தளத்திலிருந்து வெளிவந்திருக்கலாம் என்பதும் அவை மற்றத் தளங்களுக்குப் பரப்பப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

அதுபோன்ற சமூகப் பிரிவினையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதை அரசாங்கம் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட கோ, அதன் பின்னணியில் அரசு சார்ந்த அமைப்புகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் ஒவ்வொன்றையும் அதிகாரிகள் கண்காணித்து, விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டம், இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம், இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் (பொஃப்மா), இணை­ய­வழிக் குற்­றச்­செ­யல் தீங்­கு­கள் சட்டம் (OCHA) போன்ற பல்வேறு சட்டங்கள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

இந்தச் சட்டங்கள், இன நல்லிணக்கம் பாதிக்கப்படும்போது குடிமக்களையும் சமூகக் கட்டமைப்பையும் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன என்பதுடன், அவற்றைப் பயன்படுத்த சிங்கப்பூர் தயாராக இருப்பதையும் வலியுறுத்தவதாக திரு கோ குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் சமூகத்தைப் பிரிக்க அல்லது செல்வாக்கு செலுத்த முயலும் முயற்சிகளுக்கு எதிரான மிக முக்கியமான பாதுகாப்பு அரண் விழிப்புணர்வுள்ள மக்களே என்றார் அவர்.

இணையத்தில் தகவல்களைப் பெறும்போதும் பகிரும்போதும் சிங்கப்பூரர்கள் அறிவார்ந்து செயல்பட வேண்டும் பிரித்தாளும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என்று திரு கோ கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நாடாளுமன்றம்உள்துறை அமைச்சுஇந்தியர்சமூகம்இந்தியச் சமூகம்