சென்ற ஆண்டு தைப்பூச நாளன்று கோவிலில் சந்தித்து நண்பர்களாக மாறிய சீன பக்தர்கள் இந்த ஆண்டும் பக்திப் பயணத்தில் சிறப்பாக இணைந்தனர்.
வாயில் அலகு குத்தி, முதுகில் எலுமிச்சங் கனிகளைத் தொங்கவிட்டு, நண்பர்களான 57 வயது திரு ரோய் கான், 29 வயது திரு கேரி டியோங் இருவரும் தலையில் பால்குடத்தைச் சுமந்துவந்தனர்.
“கடந்த ஆண்டு தைப்பூசத்தில் நான் கோயிலில் இருந்தபோது அவர் என் வழிகாட்டுதலை நாடி வந்தார். அதன்மூலம் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது,” என்றார் ரோய்.
“எத்தனை முறை பால்குடம் தூக்கினேன் என்ற கணக்கு என்னிடம் இல்லை. என் தாயார் காலமான ஓராண்டு மட்டுந்தான் நான் பால்குடம் தூக்கவில்லை,” என்றார் அவர்.
பால்குடம் தூக்கி நேர்த்திக் கடன் நிறைவேற்ற மனத்தளவிலும் உடலளவிலும் பல நாள்களாக ஆயத்தமானதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
“முதல் முறையாக பால்குடம் தூக்கியபோது 48 நாள்கள் விரதம் இருந்தேன். தற்போது நாள்களைக் குறைத்து இம்முறை கிட்டத்தட்ட பத்து நாள் விரதம் இருந்தேன்,” என்றார் ரோய்.
தரையில் படுத்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து இறைவனின் பெயரை உச்சரித்து அனுதினமும் வேண்டியதாகக் கூறிய ரோய், “நான் எதற்கும் அஞ்சமாட்டேன். என்னைக் காக்க இறைவன் இருக்கிறார்,” என்றார்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குமேலாக துர்கை அம்மனை வழிபட்டுவரும் திரு சாம், 67, ‘துர்கா தேவி அம்மா’ எனும் அமைப்பைத் தொடங்கியவர்.
தொடர்புடைய செய்திகள்
அக்குழுவிலிருந்து சுமார் 25 பேர் தைப்பூசத் திருநாளன்று பால்குடம் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பிற சமயங்களின் வழிபாட்டு இடங்களுக்கும் செல்வதுண்டு என்று கூறிய சாம்,”தைப்பூசத்துக்காக நாங்கள் சென்னை, காஞ்சிபுரம், பழனி, திருச்சி ஆகிய இந்திய நகரங்களுக்கும் சில முறை சென்றுள்ளோம்,” என்றார்.
தமிழ் பேசும் சீனரான மார்ட்டின், சீனர்கள் தைப்பூசம் கொண்டாடுவது வியக்கத்தக்க விஷயமன்று என்றார். “உலகெங்கும் இந்துக்கள் தைப்பூசத்தைக் கொண்டாடுகின்றனர். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?,” எனப் புன்னகையுடன் கூறிச் சென்றார் அந்தப் பக்தர்.