வாகன உரிமைச் சான்றிதழின் (சிஓஇ) ‘ஏ’ பிரிவு கட்டணம் புதன்கிழமையன்று (ஜூன் 17) 1.7 விழுக்காடு குறைந்து $123,847 ஆனது. இது வகை ‘பி’ பிரிவுக் கட்டணமான $123,502ஐ விட அதிகம்.
கடந்த நான்கு மாதங்களில் ‘ஏ’ பிரிவுச் சான்றிதழின் கட்டணம், ‘பி’ பிரிவை விட அதிகமாகி இருப்பது இது மூன்றாவது முறையாகும்.
ஜூன் 4ஆம் தேதியன்று நடந்த கடைசி ஏலக்குத்தகையில், இரண்டு வகைகளுக்கும் இடையே $980 வித்தியாசம் இருந்தது. பெரிய, அதிக சக்திவாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவுக் கட்டணம் அதிகமாக இருந்தது.
பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணத்தைத் தவிர, மற்ற அனைத்து வகைகளுக்குமான கட்டணங்கள் ஜூன் 17ஆம் தேதியன்று குறைந்தன.
முந்தைய ஏலக்குத்தகையில் சிறிய, குறைந்த சக்தி வாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘ஏ’ பிரிவுக் கட்டணம் $126,009 ஆக இருந்தது. அப்போது ‘பி’ பிரிவுக்கான கட்டணம் $126,989 ஆக இருந்தது தற்போதைய கட்டணம் $123,502 என்பது 2.7 விழுக்காடு குறைவாகும்.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் $129,000லிருந்து $129,002 ஆக $2 உயர்ந்தது.
மோட்டார் சைக்கிளுக்கான ‘டி’ பிரிவுக் கட்டணம் 0.1 விழுக்காடு குறைந்து, $10,000லிருந்து $9,989 ஆகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம், சாதனை அளவான $94,000லிருந்து 1.1 விழுக்காடு சரிந்து $93,001 ஆகப் பதிவானது.

