திருக்குறள்களைக் கொண்டு திருவள்ளுவர் உருவத்தை ஏ3 தாளில் (26 சென்டிமீட்டர் x 38.1 சென்டிமீட்டர்) வரைந்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் கட்டடவியல் கலைஞரும் ஓவியருமான தமிழரசன் சண்முகானந்தம், 29.
திருக்குறளால் வரையப்பட்ட ஆகச் சிறிய திருவள்ளுவர் உருவம் எனும் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஓவியத்தில், ஒவ்வோர் எழுத்தின் உயரமும் ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவானது. மொத்தம் 300க்கும் மேற்பட்ட வரிகள். ‘அகர முதல’ எனத் தொடங்கி, குறள்கள் வரிசையாக எழுதப்பட்டு, 1,330ஆவது குறளுடன் முடிவடைகிறது.
தமிழ் முரசின் 90வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நினைவாக, ‘தமிழ் முரசு 90’ என்ற சொற்களையும் ஓவியத்தில் வரைந்துள்ளார் தமிழரசன். அதை உருவாக்க, ‘தமிழ் முரசு சமூகத்தின் குரல் நூற்றாண்டை நோக்கி’ என்ற வாக்கியத்தையே பலமுறை எழுதியுள்ளார்.
அதனால், திருக்குறளின் 42,194 எழுத்துகள் உட்பட, மொத்தம் 47,000க்கும் மேற்பட்ட எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமைச் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) மாலை தமிழரசனுக்கு அந்தச் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேதாரண்யம், நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரசன், மூன்று ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் வந்தார். இங்கு அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
திரு லீ குவான் யூவின் உருவப்படத்தை வரைந்தவர்
இதற்குமுன் 2024ல், தேசத்தந்தை திரு லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளுக்குப் புகழ் அஞ்சலியாக, 100,000க்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டு 82 சென்டிமீட்டர் x 52 சென்டிமீட்டர் அளவில் திரு லீயின் உருவப்படத்தை வரைந்தார் தமிழரசன்.
தொடர்புடைய செய்திகள்
கையால் எழுதப்பட்ட எழுத்துக்களுடன் செய்யப்பட்ட ஆகப் பெரிய ஓவியம் எனும் சாதனைக்காக அந்த ஓவியம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
“திரு லீ குவான் யூ படத்தை வரையும்போது ‘சிங்கப்பூர்’ என்ற அதே சொல்லையே 11,000 முறை எழுதினேன். ஆனால், திருக்குறளில் ஒவ்வொன்றும் புதிய சொல். அதனால் பார்த்துப் பார்த்துக் கவனமாக எழுதவேண்டியிருந்தது,” என்றார் தமிழரசன். நேரடியாகப் பேனாவில் எழுதியதால் தவறுக்கு இடமில்லை.
தூக்கம் குறைந்தாலும் சாதிக்கும் வேட்கை குறையவில்லை
சனிக்கிழமையும் வேலை இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் தமிழரசனால் பகல்நேரத்தில் ஓவியத்தை வரைய முடிந்தது. மற்றபடி இரவுகளில், தன்னுடன் வசிப்பவர்களின் தூக்கத்தைப் பாதிக்காதபடி வீட்டின்கீழ் சலவை அறை மேசையில் அமர்ந்து பின்னிரவு 3-4 மணி வரைக் கடந்த இரு வாரங்களாக இந்த ஓவியத்தை வரைந்தார்.
“மிகச் சிறிய எழுத்துக்களை இரவில் வெறுங்கண்ணால் பார்த்து எழுதியதால் கண்வலி வந்தது. மூன்று, நான்கு மணி நேரத் தூக்கத்துடன் அடுத்த நாள் வேலைக்கும் சென்றேன்.
“எவ்வளவு கடினமாக இருந்தாலும், ‘90 ஆண்டுகள் தமிழ் முரசு மேற்கொண்டுள்ள பணிக்குச் சமர்ப்பிக்க இந்த இரு வாரங்கள்கூட என்னால் முயற்சி செய்யமுடியாதா?’ என நானே எனக்கு உந்துதலளித்துக்கொண்டேன்,” என்றார் தமிழரசன்.
தமிழ் முரசின் 90வது ஆண்டு நிறைவுபற்றித் தன்னுடன் வசிக்கும் தமிழாசிரியரிடமிருந்து கேள்விப்பட்டதும், ஓவியம் வரைந்து சமர்ப்பிக்கும் எண்ணம் தமிழரசனுக்குத் தோன்றியது.
“தமிழ்நாட்டில் இல்லாத தமிழ் நாளிதழ் இத்தனை நாள்கள் இயங்கிவந்துள்ளது என்பது எனக்கு மிகப் பெரியப் பெருமை. என் பெயருக்கேற்ப எனக்கும் தமிழ்ப் பற்று அதிகம்,” என்றார் தமிழரசன்.
உலகப் பொதுமறையான திருக்குறளை ஓவியமாக வரையலாமெனச் சிந்தித்த தமிழரசன், அதைச் சாதனையாக மாற்ற விரும்பினார்.
“ஏற்கெனவே தமிழ்நாட்டில் திருக்குறளைக் கொண்டு பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றைவிடச் சிறிய எழுத்தில் எழுத முடிவுசெய்தேன்,” என்றார் அவர். அதற்கென 0.38மில்லிமீட்டர் பேனாவைத் தேடி வாங்கினார்.
திட்டமிட மூன்று, நான்கு மாதங்கள்; பென்சிலால் உருவத்தையும் கோடுகளையும் வரைய ஐந்து மணி நேரம். திருக்குறள்களை எழுதி முடிக்க 46 மணி நேரம். தமிழ் முரசு 90வது ஆண்டு நிறைவு சார்ந்த சொற்களை எழுத ஆறு மணி நேரம் எடுத்தது.
ஒவ்வொரு படைப்பிலும் சிறத்தை
இவ்வாண்டு தொடக்கத்தில், பெருமாள் உருவப்படத்தைப் புள்ளிகளால் மட்டுமே 180 மணி நேரத்தில் வரைந்தார் தமிழரசன்.
பள்ளிப் பருவத்திலேயே, ஐந்தாம் வகுப்பில் தமிழரசன் வரைந்த திருவள்ளுவர் ஓவியம் செய்தித்தாளில் வந்தது. பத்தாம் வகுப்பிலிருந்து திருக்குறளுடன் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தார். 100 குறள்களுடன் தொடங்கி, நான்கு ஏ2 தாள்களை இணைத்து 1,000 குறள்களுடன் பெரிய திருவள்ளுவரை வரைந்து, பின்பு ஒரே ஏ2 தாளில் 1,000 குறள்கள் கொண்ட பெரிய திருவள்ளுவரை வரைந்தார்.
ஆண்டைச் சாதனையுடன் முடிக்கும் தமிழரசன், அடுத்த ஆண்டு புதிய கருப்பொருளில் ஓவியம் வரைந்து சாதனைபுரிய விரும்புகிறார்.

