சிங்கப்பூரின் அணுசக்தித் திறன்களை வலுப்படுத்த மூன்று புதிய ஆய்வுகள் தொடங்கப்படுவதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தெரிவித்துள்ளது.
அணுசக்திப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை, சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகியவற்றில் நாட்டின் திறன்களை மேம்படுத்த அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்துலக அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு மறுஆய்வுத் திட்டத்தின் முதற்கட்ட மதிப்பீட்டிற்குச் சிங்கப்பூர் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு இந்த ஆய்வுகள் கைகொடுக்கும்.
இத்திறன் மேம்பாட்டு முயற்சிகள், சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு ஆதரவளிக்கும் என்று அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில் அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பது குறித்து ஆராயச் சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் இணங்கியுள்ளதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங் (எரிசக்தி, தொழில்துறை) தெரிவித்தார். அனைத்துலக அணுசக்தி அமைப்பும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார அமைப்பும் இணைந்து நடத்திய மாநாட்டில் அவர் பேசினார்.
ஆசிய, தென்கிழக்காசிய நாடுகள், அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதில் பெருஞ்சவாலை எதிர்கொண்டுள்ளதாக டாக்டர் டான் கூறினார். அணுசக்தி, நம்பிக்கைக்குரிய தீர்வாக உருவெடுத்துள்ளபோதும் அணுமின் திட்டம் என்பது சிக்கலான முயற்சி என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு முன்னர் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அமைச்சர் டான்.
