சிங்கப்பூரில் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்தாலும் வெப்பமான வானிலை தொடரும்.
பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
குறிப்பிட்ட நாள்களில் வெப்பம் 35 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் சுற்றுப்புற வட்டாரத்திலும் பருவக்காற்றுகளுக்கு இடைப்பட்ட பருவநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல திசைகளிலிருந்தும் காற்று வீசக்கூடும்.
சுமத்ரா காற்றழுத்தம் காரணமாக, சில நாள்களில் காலையில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். சில நாள்களில் மழை மாலை வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
மே மாதத்தின் முதல் பாதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அளவுக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

