தீபாவளித் திருநாளை முன்னிட்டு, குறிப்பிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இயங்கும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்களின் ரயில்கள், பேருந்துகள் ஆகியவற்றின் சேவை நேரங்கள் தீபாவளிக்கு முதல் நாள் நீட்டிக்கப்படும்.
வடக்கு-தெற்கு (NSL), கிழக்கு-மேற்கு (EWL), தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (TEL), வட்டப்-பாதை (CCL) ஆகிய ரயில் சேவைகள் நள்ளிரவு கடந்து தீபாவளி அதிகாலை வேளை வரையில் சேவையாற்றும்.
வடக்கு தெற்கு வழித்தடத்திலும் (NSL) கிழக்கு மேற்கு (EWL) வழித்தடத்திலும் முறையே ஜூரோங் வெஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் நிலையங்கள் நோக்கிச் செல்லும் ரயில்கள் சிட்டிஹால் நிலையத்திலிருந்து நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (TEL) வழித்தடத்தில், உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து பேஷோர் நிலையத்துக்குப் புறப்படும் ரயில், நள்ளிரவு தொடங்கும் எனவும் எதிர்திசையிலிருந்து வண்டி 12.12 மணிக்குக் கிளம்பும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வட்டப் பாதை (CCL) வழித்தடத்தில் ஸ்டேடியம் நிலையத்துக்கான கடைசி ரயில், டோபிகாட் நிலையத்திலிருந்து அதிகாலை 12.17 மணிக்குப் புறப்படும். மரினா பேயிலிருந்து கால்டிகாட் நிலையத்துக்கான கடைசி வண்டி, 12.21 மணிக்குக் கிளம்பும். மரினா பேயிலிருந்து பொடேனிக் கார்ட்ன்ஸ் நிலையத்துக்கான கடைசி ரயில் 12.29 மணிக்குப் புறப்படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை, சாங்கி விமான நிலைய ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் இல்லை.
வடக்கு கிழக்கு (NEL) வழிப்பாதை, டவுன்டவுன் (DTL) வழிப்பாதை, செங்காங் பொங்கோல் எல்ஆர்டி சேவைகள் வழக்கத்தைவிட அரை மணி நேரம் கூடுதலாக அன்றைய தினம் செயல்படும்.
பொங்கோல் கோஸ்ட் நோக்கிச் செல்லும் வடக்கு கிழக்கு (NEL) வழித்தடத்துக்கான ரயில் ஹார்பர் ஃபிரன்ட் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும். எதிர்பாதைக்கான கடைசி ரயில், நள்ளிரவு கிளம்பும்.
டவுன்டவுன் (DTL) வழித்தடத்தில் எக்ஸ்போ நிலையத்துக்குச் செல்லும் கடைசி ரயில், புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து நள்ளிரவு கடந்து 12.03 மணிக்குப் புறப்படும். புக்கிட் பாஞ்சாங் நிலையத்துக்கான கடைசி வண்டி, எக்ஸ்போ நிலையத்திலிருந்து 12.04 மணிக்குக் கிளம்பும்.
செங்காங், பொங்கோல் எல்ஆர்டி சேவைகளுக்கான கடைசி ரயில் முறையே தீபாவளி நாளன்று அதிகாலை 1.06 மணிக்கும் 1.09 மணிக்கும் குறிப்பிட்ட அந்த இரு நிலையங்களில் இருந்து புறப்படும்.
இதற்கிடையே, பிடோக், பூன்லே, புக்கிட் பாத்தோக், ஜூரோங் ஈஸ்ட், உட்லண்ட்ஸ் ஆகிய பேருந்து முனையங்களில் இருந்து புறப்படும் 54 பேருந்துச் சேவைகளின் நேரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. கோ அஹெட், டவர் டிரான்சிட் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் அவற்றில் உள்ளடங்கும்.
நேரம் நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவைகளில் ஜூரோங் ஈஸ்ட் பேருந்து முனையத்திலிருந்து பஸ் எண்கள் 143M, 333, 334 and 335 ஆகியன அன்றைய தினம் அதிகாலை 1.50 மணிக்குப் புறப்படும்.
மேல் விவரங்களுக்கு, பயணிகள் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களின் இணையப் பக்கங்களைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
