நேரத்தை மிச்சப்படுத்தும் அவசரகாலப் பயணப் போக்குவரத்து முன்னுரிமைத் திட்டம்

2 mins read
f84ba03f-e91e-4b28-ac34-a00c3f95ee4f
ஒவ்வோர் ஆம்புலன்சிலும் அலைவரிசைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகளை இயக்க முடியும். அவ்வாறு செய்யும்போது ஆம்புலன்சுகள் போக்குவரத்து விளக்கு உள்ள சாலைச் சந்திப்பை நெருங்கும்போது போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவசரகால ஆம்புலன்சுகளுக்கான போக்குவரத்து முன்னுரிமைத் திட்டம் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் நடப்புக்கு வந்ததிலிருந்து அது 2,500க்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு நிமிடம், 57 வினாடி மிச்சப்படுத்தப்பட்டன.

இந்தப் போக்குவரத்து முன்னுரிமைத் திட்டம் தற்போது எட்டு மருத்துவமனைகளுக்கு அருகில் செயல்படுத்தப்படுகிறது என்றும் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் மருத்துவமனைக்கு விரையும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் செயல்படுத்தப்படும்போது போக்குவரத்து விளக்குகள் அடங்கிய சாலைச் சந்திப்புகளில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்சுகள் நிறுத்தாமல் தொடர்ந்து செல்லலாம்.

இதன்மூலம் சாலைச் சந்திப்புகளில் நிறுத்த வேண்டிய நிலையும் போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்போது சாலை விதிமுறையை மீறி தொடர்ந்து செல்லும் நிலையும் அவற்றுக்கு ஏற்படாது.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள போக்குவரத்து விளக்கு அடங்கிய சாலைச் சந்திப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து முன்னுரிமைத் திட்டத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கின.

அது முதலில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள போக்குவரத்து விளக்கு அடங்கிய சாலைச் சந்திப்புகளில் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆம்புலன்சிலும் அலைவரிசைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவியைக் கொண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகளை இயக்க முடியும்.

அவ்வாறு செய்யும்போது ஆம்புலன்சுகள் போக்குவரத்து விளக்கு அடங்கிய சாலைச் சந்திப்பை நெருங்கும்போது போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்