தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புதிய திட்டங்களால் மறுமலர்ச்சி காணும் முதியோர் நல்வாழ்வு 

நலமுடன் மூப்படைதலுக்கான இருப்பிடமாக மாறும் தோ பாயோ வட்டாரம்

2 mins read
a219bff3-bd97-47e5-accd-4445604949a2
முதியோரின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்திருந்தார். - The Straits Times

முதியோரின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் நலமுடன் மூப்படையும் அக்கம்பக்கங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அத்தகைய முதல் நலமுடன் மூப்படைவதற்கான அக்கம்பக்க வசதியைப் பெறவுள்ளது தோ பாயோ.

இத்தகவலை  ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்டார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்.

அதிகளவிலான மூத்தோரைக் கொண்டிருக்கும் பழம்பெரும் குடியிருப்புப் பேட்டையாக இருக்கும் தோ பாயோவில் இந்தத் திட்டம் செயலாக்கம் காணவுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் அமைச்சர்.

மேலும், மூத்தோர் தங்கள் நண்பர்கள், உற்றாருருடன் இணைந்து துடிப்புடனும் நலமாகவும் இருக்க சமூகப் பங்காளிகளுடன் இணைந்து தாம் மேற்கொண்டுள்ள திட்டங்கள்குறித்து விவரித்தார் அவர்.

“உதாரணத்திற்கு  சுகாதாரச் சேவைகளை முதியோர் வசிக்கும் இல்லங்களுக்கு அருகில் கொண்டுவரும் நோக்கில் துடிப்புடன் மூப்படையும் நிலையங்களில் சுகாதாரக் குறிப்புகளை வெளியிடும் முயற்சிகளை நடைமுறைப்படுத்தினோம்,” என்றார் திரு சீ.

இச்சேவையை நோய்த் தடுப்புச் சேவைகளுக்கும் எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகச் சொன்ன அமைச்சர், தனியார் குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தோரை சென்றடைவது குறித்தும் பேசினார்.

“துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் காண்டோமினியத்தில் வசிக்கும் மூத்த  குடியிருப்பாளர்களுக்கான நீருடற்பயிற்சி வகுப்புகள் வாயிலாக அங்குள்ள முதியோரைச் சென்றடைகிறது,” என்றார் திரு சீ.

எதிர்வரும் மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் மருத்துவத் தோட்டங்கள், முதுமை மறதிநோய் உள்ள மூத்தோருக்கான அம்சங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று சுட்டினார் அமைச்சர்.

ஒருங்கிணைந்த தோ பாயோ மேம்பாட்டுத் திட்டம் 2030ல் நிறைவடையும்போது, தோ பாயோ எம்ஆர்டி நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் மற்றும் மறுசீரமைப்பு கண்ட பலதுறை மருந்தகம் உள்ளிட்டவற்றிற்கு நிழற்குடை பாதையிலேயே அவர்கள் நடந்து செல்ல முடியும் என்றும் விளக்கினார். 

இந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட 200 சமூக பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் (சிசிஏ) செங்காங்கில் நிறுவப்படும் என்ற திரு சீ,  இதுபோல மூத்தோருக்கு ஏதுவான, அவர்கள் நலமுடன் வாழ வகைசெய்யும் பற்பல சேவைகள் கொண்ட ஏறத்தாழ 200 ‘சிசிஏ’க்கள் அடுத்த ஆண்டு தோ பாயோவில் அமைக்கப்படவுள்ளதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்