சிங்கப்பூரில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்துப் போட்டிகளைச் சட்டவிரோதமாகக் காண்பதற்கான சாதனங்கள் விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்ததாகக் கூறினார் இபிஎல் தலைமை வழக்கறிஞர் கெவின் பிளம்ப்.
சிங்கப்பூரின் அதிகாரபூர்வ இபிஎல் ஒளிபரப்பு நிறுவனமாக கடந்த 2016ஆம் ஆண்டு சிங்டெல் இருந்தபோது சட்டவிரோத ஒளிபரப்புப் பற்றிய தகவல்கள் கசிந்தன.
அதுகுறித்து கடந்த வாரம் (ஜனவரி 22) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசியபோது திரு பிளம்ப் வியப்புத் தெரிவித்தார்.
இபிஎல் போட்டிகளைச் சட்டவிரோதமாகக் காண்பதற்கான சாதனங்கள் மிகவும் எளிதாக இங்கு கிடைத்தது பற்றிக் குறிப்பிடுகையில், அதிகாரபூர்வக் கடைகளில் விற்பதுபோல எவ்வித சந்தேகத்தையும் கிளப்பாத வகையில் அந்த விற்பனை நடைபெற்றதாகக் கூறினார்.
2017அம் ஆண்டு வரை அப்படிப்பட்ட சட்டவிரோத சாதனங்களைத் தாம் கேள்விப்பட்டதில்லை என திரு பிளம்ப் தெரிவித்தார்.
ரோச்சோர் கேனல் ரோட்டில் உள்ள சிம் லிம் ஸ்குவேரில் உள்ள கடைகளில் அந்தச் சட்டவிரோத சாதனங்கள் விற்கப்படுவதை அறிந்த காவல்துறை 2022 அக்டோபரில் அங்கு சோதனை நடத்தியது. அப்போது சட்டவிரோத ஒளிபரப்புச் சாதனங்களை விற்ற குற்றத்திற்காக 17 பேர் பிடிபட்டனர்.
2024 அக்டோபர் மாதம் பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ், அந்தச் சாதன விற்பனையாளர் ஒருவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட முதலாமவர் அவர்.
எம்டி கேட்ஜட் பிளஸ் (MT Gadget+), கிராண்ட்நியூ (Grandnew) என்ற பெயர்களில் இயங்கிய அவரது கடைகளுக்கு முறையே $200,000 மற்றும் $100,000 அபராதம் விதிக்கப்பட்டது.

